எதிர்வரும் 14ஆம் தேதியன்று சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது தமிழ்த் திரையுலகம்.
பொங்கல், தீபாவளியையொட்டி முன்னணி நாயகர்கள் நடித்த படங்கள் வெளியீடு காண்பது வழக்கமான நிகழ்வுதான். அதேபோல் சித்திரை புத்தாண்டு தினத்தன்று பெரிய படங்கள் வெளியாகி வருகின்றன.
இந்த ஆண்டு குறைந்தபட்சம் ஆறு படங்கள் வெளியீடு காண உள்ளன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'ருத்ரன்', யோகிபாபு நடித்துள்ள 'யானை முகத்தான்', விஜய் ஆண்டனி நடித்துள்ள 'தமிழரசன்', ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'சொப்பன சுந்தரி', மகேந்திரன் நடித்துள்ள 'ரிப்பப்பரி', அருள் நிதி நடித்துள்ள 'திருவின் குரல்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
இவற்றுடன் தெலுங்கில் சமந்தா நடித்து உருவாகியுள்ள 'சாகுந்தலம்' படமும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
இந்தப் பட்டியலில் மேலும் சில படங்கள் சேருமா அல்லது நீங்குமா என்பது அடுத்த வாரம்தான் தெரியும். எனினும் குறைந்த செலவில் எடுக்கப்பட்டுள்ள ஒன்றிரண்டு படங்கள் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.
இதற்கிடையே, ஓடிடி தளத்தில் முன்னறிவிப்பு இன்றி சில படங்கள் வெளியாகக்கூடும். ஓடிடி தளத்தில் தமிழ்ப் படங்களை வெளியிடுவதற்கான நடைமுறை எளிதாக இருப்பதால் போதுமான திரையரங்குகள் கிடைக்காத தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் கடைசி நேரத்தில் ஓடிடி நிறுவனங்களை நாடுகின்றனர்.
"வெளியீட்டுத் தேதி கிடைக்காமல் போகும் பட்சத்தில் மேலும் சில வாரங்கள் அல்லது மாதங்கள் காத்திருக்க இவர்கள் விரும்பு வதில்லை. கடன் பெற்று படங்களைத் தயாரிப்பவர்களால் இவ்வாறு காத்துக்கிடக்க முடியாமல் போகிறது," என விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

