சல்மான் கான் வேட்டியை அணிந்துகொண்டு அருவருப்பான வகையில் நடனம் ஆடி இந்துக்களின் கலாசார உடையான வேட்டியை இழிவுபடுத்திவிட்டார் என்று அவர் ஆடிய பாடலுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.
2014ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்
படம் 'வீரம்'.
இந்தப் படம் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்தப் படத்தை
இந்தியில் 'கிஸி கி பாய், கிஸி கி ஜான்' என்ற பெயரில் மறுபதிப்பு செய்யப்பட்டது. இதில் அஜித் நடித்த வேடத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் இருந்து 'என்னம்மா' என்ற பாடல் அண்மையில் வெளியானது. இதில் வேட்டியைக் கட்டிக்கொண்டு சல்மான் கான் மோசமான அசைவுடன் அருவருக்கும் வகையில் நடனம் ஆடி உள்ளார்.
இந்த அசைவுகளைப் பார்த்து பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணனும் தனது கண்டனத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "இது நமது தென்னிந்திய கலாசாரத்தை மிகவும் கேலி செய்வதோடு இழிவுபடுத்தும் வகையில் நடன அமைப்பு செய்யப்பட்டுள்ளது.
"நமது கலாசார உடையான வேட்டியை அருவருப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. 'வீரம்' படத்தில் அஜித் ஆடியதற்கும் இந்தப் படத்தில் சல்மான் கான் ஆடியதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
"இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த தமிழ் ரசிகர்கள் அதில் 'வீரம்' படத்தின் சாயல் சிறிதும் இல்லை. சல்மான் கானுக்கு இந்த வேடம் சிறிதும் பொருந்தவே இல்லை. இந்தப் பாடலை படத்தில் இருந்து வெட்டவேண்டும்," என்று பதிவிட்டு வருகின்றனர்.
சல்மான் கானின் வேட்டி நடனம் அருவருப்பாக உள்ளது எனச் சாடல்

