கதாநாயகனுடன் நெருக்கமாக நடிக்க வேண்டிய காட்சிகள் அதிகமாக இருந்ததால் 'பேச்சுலர்' படத்தில் தம்மால் நடிக்க இயலாமல் போனது என்கிறார் நடிகை வாணி போஜன்.
ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்த அப்படத்தில் வாணியை ஒப்பந்தம் செய்ய தயாரிப்புத் தரப்பு முயற்சி மேற்கொண்டது. ஆனால் வாணி அந்த வாய்ப்பை ஏற்கவில்லை.
இந்நிலையில், அண்மைய பேட்டியில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது வருத்தம் அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"பேச்சுலர்' படத்தின் கதையைக் கேட்டபோது, அதில் நாயகனும் நாயகியும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அதிகம் இருந்தன.
"நான் சின்னத்திரையில் இருந்து திரையுலகுக்கு வந்தவள். எனவே இதுபோன்ற நெருக்கமான காட்சிகளில் நடித்தால் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகமும் பயமும் ஏற்பட்டது.
"அதேசமயம் எனக்காக எந்தவொரு காட்சியையும் நீக்கிவிடக்கூடாது என்றும் யோசித்தேன். அதனால்தான் வேறு வழியின்றி அந்தப் படத்தில் இருந்து நான் விலக நேரிட்டது. ஜி.வி.பிரகாஷுடன் விரைவில் இணைந்து நடிக்க முடியும் என நம்புகிறேன்," என்று வாணி போஜன் தெரிவித்துள்ளார்.

