'அருவி' பட நாயகி அதிதி பாலனின் உறவினரான ரேவதியும் திரையுலகில் கால் பதித்துள்ளார். 'ஆகஸ்ட் 16, 1947' படத்தில் ரேவதி தான் நாயகி.
அறிமுகப் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களையும் கோடம்பாக்கத்தினரையும் தன் பக்கம் கவர்ந்துள்ளார் ரேவதி.
"தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் இந்தப் படத்தின் பாடல்கள் ஒலிக்கின்றன. என் நடிப்பையும் பலர் பாராட்டுகின்றனர். என்னைத் திரையில் பார்த்தபோது முதலில் எனக்கே வியப்பாக இருந்தது. இது நான்தானா? என்று ஆச்சரியப்பட்டேன். அந்த அளவுக்கு என்னை அழகாகத் திரையில் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார்.
"அவரைப் போலவே ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் பொன்குமார் ஆகியோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எப்படியோ ரசிகர்களுக்குப் பிடித்த ஒரு படைப்பில் நானும் பங்களித்துள்ளேன் என்பதே என் மகிழ்ச்சிக்குப் போதுமானதாக உள்ளது," என்கிறார் ரேவதி.
அதிதி பாலன் இவரது அத்தைப் பெண். அம்மு அக்கா என்றுதான் பாசமாகக் குறிப்பிடுகிறார். அக்காவைப் போன்று தானும் நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். 'அருவி' படக்குழுவினர் அடுத்து 'வாழ்' என்ற புதுப் படத்துக்காக இணைந்தபோது, அவர்களுடன் இணைய விரும்பினாராம்.
"அவர்கள் நடத்திய நடிப்புத் தேர்வில் கலந்துகொண்டேன். ஆனால் நான் அப்போது சின்னப் பெண் என்பதால் அவர்களால் என்னைத் தேர்வு செய்ய முடியவில்லை. அதற்காக ஆசையைக் கைவிட முடியுமா... சினிமாவில் எனக்கான வாய்ப்புகள் தேடிவரும் என நம்பிக்கையோடு காத்திருந்தேன். அந்தப் பொறுமையும் நம்பிக்கையும்தான் இன்று என்னைப் பல கோடி ரசிகர்களுக்கு நடிகையாக அறிமுகப்படுத்தி உள்ளன," என்று சொல்லும் ரேவதிக்கு சென்னை தான் சொந்த ஊர். சமையல் கலையில் மிகுந்த ஆர்வம் உண்டாம். அதனால் அக்கலை சார்ந்த பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார்.
ரேவதியின் தந்தை சுனிஷ ஷர்மா, தாயார் லக்கி ஆகிய இருவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள். ரேவதியின் சினிமா ஆசைக்கு பெற்றோர் தரப்பில் இருந்து எந்தவித தடையும் இல்லையாம்.
"அதிதி அக்கா எனக்கு அத்தைப் பெண். நடிப்பின் மீது எனக்கு ஈடுபாடு வருவதற்கு அவர்தான் காரணம். மூன்று வயதிலிருந்தே பரத நாட்டியம் கற்று வருகிறேன்.
"கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது இணையம் வழி ஒரு போட்டி நடைபெற்றது. அதற்காகப் புடவை அணிந்து சிறிய காணொளியைத் தயார் செய்ய வேண்டியிருந்தது. எனது வகுப்பறைத் தோழியின் தந்தை சிறந்த புகைப்படக் கலைஞர். அனைத்துலக ஊடகங்களில் அவரது படங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
"எங்களுடைய குடும்ப நண்பராகவும் மாறிவிட்டார். அவர்தான் என்னைப் புடவையில் பல்வேறு கோணங்களில் படம்பிடித்தார். சமூக ஊடகங்களில் வெளியான அந்தப் படங்களைப் பார்த்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் ஆகஸ்ட் 16, 1947 படத்தின் கதாநாயகியாக என்னை நடிக்க வைக்கலாம் என்று இயக்குநர் பொன்குமாரிடம் கூறியுள்ளார்.
"அதன் பிறகு மீண்டும் ஒரு நடிப்புத் தேர்வில் பங்கேற்றேன். அவர்கள் எதிர்பார்த்ததுபோல் எனது முக பாவங்களும் உணர்வுபூர்வமான நடிப்பும் படக்குழுவினருக்குப் பிடித்துப் போனது. கல்லூரியில் முதலாமாண்டு படித்தபோது நடிக்கத் தேர்வானேன். இப்போது கல்லூரி இறுதியாண்டில் உ ள்ளேன்," என்கிறார் ரேவதி.
இவர் வைத்துள்ள விருப்ப நடிகர்கள் பட்டியல் நீளமாக உள்ளது. தனுஷுடன் ஒருமுறையாவது இணைந்து நடித்துவிட வேண்டும் என்பதுதான் முதல் இலக்காம்.

