'கண்ணை நம்பாதே' படத்தை அடுத்து மு.மாறன் இயக்கத்தில் உருவாகும் 'பிளாக்மெயில்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த்.
அருமையான கதை, அற்புதமான திரைக்கதை ஆகியவற்றால் தாம் வெகுவாகக் கவரப்பட்டதாகவும் தொடர்ந்து பல நாள்களுக்கு இரவு நேரப் படப்பிடிப்பில் பங்கேற்றது சவாலான அனுபவமாக இருந்தது என்றும் அவர் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"இரவு படப்பிடிப்பு என்பது நாம் நினைப்பது போல் அவ்வளவு எளிதான விஷயமல்ல. இரவில் கண் விழித்துப் பகலில் உறங்கும் பழக்கம் நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்காது. எனவே தொடர்ந்து இரவில் முழு முனைப்புடன் பணியாற்றுவது என்பது சாதாரணமல்ல.
"எனினும் இயக்குநரின் திட்டமிட்ட செயல்பாடும் படத்தின் கதையும் அனைவரையும் சோர்வின்றி இயங்க வைத்தன. இரவு வேளையில் வெளிப்புறப் படப்பிடிப்பை நடத்துவதற்குப் பெரும் பொருள்செலவு ஏற்படும். மிகப்பெரிய படக்குழுவும் தேவைப்படும்.
"மேலும், ஒரே கேமராவை வைத்து காட்சிகளைப் படமாக்க இயலாது. ஆங்காங்கே கேமராக்கள் வைக்கப்பட்டு, பரவலாக விளக்குகளும் பொருத்தப்படும். இதையெல்லாம் மனதிற்கொண்டு சரியான நேரத்தில், உரிய இடத்தில் வசனங்களைப் பேச வேண்டியிருக்கும். மேலும் வசனங்களுக்கேற்ற முகபாவனைகளும் மிகையின்றி இயல்பாக இருத்தல் அவசியம்," என்கிறார் ஸ்ரீகாந்த்.
'பிளாக்மெயில்' படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். மேலும் பிந்து மாதவி, தேஜு அஸ்வின், ஹரிபிரியா, ரமேஷ் திலக், ரெஎடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
அண்மைய சில நாள்களாக ஸ்ரீகாந்த், பிந்துமாதவி சம்பந்தப்பட்ட காட்சிகளைத்தான் படமாக்கி வந்தனராம். சென்னை, ஊட்டி, குன்னூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
"ஒவ்வொரு காட்சியையும் படமாக்கும் முன்னர் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் என்னையும் பிந்து மாதவியையும் அழைத்து ஆலோசனை நடத்தினர். இதன் மூலம் பல தவறுகளும் நேர விரயமும் தவிர்க்கப்பட்டன.
"எல்லா இயக்குநருமே இவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவார் என எதிர்பார்க்க இயலாது. ஆனால் இயக்குநர் மாறன் மிகவும் இனிமையானவர். படத்தில் பணியாற்றும் அனைவருக்குமே முழு சுதந்திரம் அளிப்பார். அதனால் அவருடன் இணைந்து செயல்படுவது அருமையான அனுபவம்," என்று பாராட்டுகிறார் ஸ்ரீகாந்த்.
ஊட்டி பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றபோது வானிலை ரம்மியமாக இருந்ததாம். அதனால் வெளிப்புறப் படப்பிடிப்பின்போது சோர்வு ஏற்படவில்லையாம்.
"குறிப்பிட்ட ஒரு காட்சியில் நானும் பிந்து மாதவியும் ஒரு காரை வேகமாக ஓட்டி வந்து ஓரிடத்தில் நிறுத்த வேண்டும். பிறகு காரில் இருந்து இறங்கி பல திசைகளில் ஓடுவோம். இருவரும் பதற்றமாகக் காட்சியளிப்பதுடன் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார் இயக்குநர்.படப்பிடிப்பு நடந்த இடத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டுவிட்டனர். இயக்குநர் கூறியபடி இடைவிடாமல் ஓடி, நடித்து முடித்த பிறகு படக்குழுவினர் மட்டுமல்லாமல் கூடியிருந்த பொதுமக்களும் கைதட்டிப் பாராட்டுத் தெரிவித்தனர்.
"அவர்களில் சிலர் கண்ணீர் சிந்தியபடி கைதட்டியதைப் பார்த்து நானும் பிந்துவும் நெகிழ்ந்து போனோம். இது போன்ற பாராட்டுகளும் கைதட்டல்களும்தான் கலைஞர்களைத் தொடர்ந்து இயங்க வைக்கும்.
"படப்பிடிப்பின் போது கிடைத்த கைதட்டல்கள் திரையரங்குகள் வரை நீடிக்க வேண்டும் என்பதே எங்களுடைய பிரார்த்தனையாக உள்ளது," என்கிறார் ஸ்ரீகாந்த்.
தற்போது தமிழிலும் தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருபவர், தமிழில் பெரும் பொருள் செலவில் உருவாகும் இணையத் தொடர் ஒன்றில் நாயகனாக நடிக்க இருப்பதாகத் தகவல். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

