ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் 'ருத்ரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் ராகவா லாரன்ஸ் 150 குழந்தைகளை தத்தெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "150 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வியை வழங்கும் புது முயற்சியை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைவரின் ஆசியும் எனக்கு வேண்டும்," என்று புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.இந்தப் பதிவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் படம் இம்மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் சில பிரச்சினைகளால் படம் ஏப்ரல் 24ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் 'சூர்யா 42' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் தலைப்பு இம்மாதம் 16ஆம் தேதி காலை 9.05 மணிக்கு வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டு பிரத்யேக வடிவமைப்புடன் 'ஒரு வலிமைமிக்க வீரம் மிக்க கதை' என்ற வாசகத்துடனும் சுவரொட்டி வெளியாகி உள்ளது. அந்த சுவரொட்டியில் இரண்டு மலைகளுக்கு இடையே குதிரைமீது அமர்ந்து போர் வீரர் தாவுவதுபோல் காட்சி உள்ளது. வேட்டை நாய் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்தப் படம் 10 மொழிகளில் வெளியாகும் என்றும் முப்பரிமாண முறையில் படம் உருவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 30ஆம் தேதி வெளியான திரைப்படம் 'தசரா'. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. அதன்படி, 'தசரா' திரைப்படம் வெளிநாடுகளில் இரண்டு மில்லியன்களையும் இந்தியாவில் ரூ.110 கோடியையும் வசூல் செய்துள்ளதாக படக்குழு சுவரொட்டி ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் நானி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகத்தின் முதல் சுவரொட்டி ஒன்று வெளியாகி உள்ளது. அந்த சுவரொட்டியில் அல்லு அர்ஜுன் பெண்ணைப் போல சேலை அணிந்து ஒப்பனை செய்துகொண்டு முரட்டு உருவமாக தோற்றமளிக்கிறார். அண்மையில் வெளியான 'காந்தாரா' திரைப்படத்திலும் இதுபோன்ற சுவரொட்டி வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா திருமணத்துக்குப் பின்னர் ஏற்கெனவே ஒத்துக்கொண்ட படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் புதிதாக சித்தார்த், மாதவன் ஆகியோருடன் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்று செய்தி வெளியானது. ஆனால், தற்பொழுது அந்த படத்தில் இருந்து அவர் வெளியேறி விட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார்.
தென்னிந்திய திரையுலகில் விஜய் ரூ.150 கோடி, கமல்ஹாசன் ரூ.130 கோடி, பிரபாஸ் ரூ.100 கோடி, ரஜினிகாந்த் ரூ.118 கோடி, அல்லு அர்ஜூன் ரூ.85 கோடிகளைச் சம்பளமாக பெறுவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

