அனைவருக்கும் பிடித்த கதையைக் கொண்ட படமாக 'ருத்ரன்' திரைப்படம் உருவாகி உள்ளது என்கிறார் ராகவா லாரன்ஸ்.
குடும்ப, பொழுதுபோக்குப் படங்களில்தான் தாம் தொடர்ந்து நடித்து வருவதாகவும் அந்தப் படங்களின் அம்சங்கள் 'ருத்ரன்' படத்திலும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"கதாநாயகனின் கதாபாத்திரத்தைத் தூக்கிப் பிடிக்கும் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் அதிகமாக இருக்கும். இக்காட்சிகள் ரசிகர்களை நிச்சயம் கவரும். குடும்பப் பாங்கான கதாநாயகி வேண்டும் என நினைத்தோம். பிரியா பவானி சங்கர் பொருத்தமாக இருந்ததால், அவரைத் தேர்வு செய்தோம். அவருக்கு முக்கிய வேடம் அமைந்துள்ளது. அதற்கேற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்.
"நான் செய்யும் சமூக சேவை குறித்து கேட்கிறார்கள். அதற்கு என் அம்மாதான் உத்வேகம் அளித்தார். அம்மா கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதும் இந்தப் படத்தில் நான் நடிக்க முக்கியக் காரணம். சமூக சேவைக்காக என்னைத் தேர்வு செய்த ராகவேந்திர சுவாமிக்கு நன்றி," என்கிறார் லாரன்ஸ்.
தயாரிப்பாளர் 'ஃபைவ் ஸ்டார்' கதிரேசன், இயக்குநராக அறிமுகமாகும் படம் 'ருத்ரன்'. இதில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா உட்பட பலர் நடித்துள்ளனர்.

