வணிக அம்சங்கள் நிறைந்த படமாக இருந்தாலும், அதில் சமூக மாற்றங்களுக்குத் தேவைப்படும் நல்ல அம்சங்களை எடுத்துச்சொல்ல முடியும் என்கிறார் இயக்குநர் சை. கௌதமராஜ்.
'ராட்சசி' படத்தை அடுத்து இவரது கைவண்ணத்தில் உருவாகும் படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இதில் நாயகனாக அருள்நிதியும் நாயகியாக துஷாரா விஜயனும் நடித்துள்ளனர்.
"ஒரு திரைப்படத்தால் சமூகத்தை உடனடியாக மாற்றிவிட இயலும் என்பது எனது வாதம் அல்ல. ஆனால், தரமான படைப்புகள் மூலம் சமூகத்தில் நிறைய விவாதங்களை எழுப்ப முடியும் என திடமாக நம்புகிறேன்," என்கிறார் கௌதமராஜ்.
'ராட்சசி' படம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிடுபவர், அது சீரழிந்து கிடக்கும் அரசுப் பள்ளியைச் சீர்திருத்திய கதை என்கிறார்.
'ராட்சசி'யில் மென்மையான அரசியலைப் பேசியிருந்ததாகவும் அப்படத்தில் காதலையும் ரத்தத்தையும் முற்றிலுமாகத் தவிர்த்ததாகவும் கூறுகிறார்.
"திரையில் ரத்தத்தைக் காண்பித்தால்தான் வெற்றிபெற முடியும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்போது அருள்நிதியை வைத்து இயக்கி உள்ள 'கழுவேத்தி மூர்க்கன்', கிராமத்துப் பின்னணியில் உருவாகும் அடிதடிப் படம்.
"வீரியமான அரசியலும் இருக்கும். ரம்மியமான காதலையும் எதிர்பார்க்கலாம். சமூகத்துக்குத் தேவைப்படும் உணர்வுப்பூர்வமான தகவலும் இடம்பெற்றுள்ளது," என்று சொல்கிறார் கௌதமராஜ்,
பட நாயகன் அருள்நிதியிடம் கதையை விவரித்தபோதே அவர் முகத்தில் பெரும் ஆர்வத்தைக் காண முடிந்ததாகக் குறிப்பிடுபவர், இதுபோன்ற கதைக்காகத்தான் தாம் நீண்டகாலம் காத்திருந்ததாக அருள்நிதி கூறினார் என்கிறார்.
"முழுக் கதையையும் கேட்டதும் வெகுவாகப் பாராட்டினார். அதேபோல் படம் முழுமையமாக முடிந்தபிறகு திரையிட்டுக் காட்டினேன். அப்போது தனது திரைப்பயணத்தில் ஆகச்சிறந்த படமாக 'கழுவேத்தி மூர்க்கன்' இருக்கும் என்று மீண்டும் பாராட்டினார்.
"அருள்நிதி ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கிறார் என்றாலே அது வித்தியாசமான, விறுவிறுப்பான கதையாகத்தான் இருக்கும் என்ற பெயர் உள்ளது.
"அந்த வகையில் அவர் எனது கதையைத் தேர்வு செய்து நடித்ததே எனக்கான முதல் வெற்றி," என்கிறார் கௌதமராஜ்.
படத்தின் நாயகி துஷாரா விஜயனின் இயல்பான நடிப்பு தம்மை கவர்ந்ததாகக் குறிப்பிடுபவர், 'கழுவேத்தி மூர்க்கன்' படம் வெளியானதும் துஷாராவுக்கு மதிப்பும் வரவேற்பும் அதிகரிக்கும் என்கிறார்.
"நான் சிறு வயதில் இருந்து பார்த்து வளர்ந்த ராமநாதபுரம் பகுதி வெயில் மனிதர்களின் வாழ்க்கையைத்தான் இந்த முறை திரையில் அலசியுள்ளேன். இப்படத்தில் பணியாற்றிய அனைவருமே இதைப் புரிந்துகொண்டு செயல்பட்டனர்.
"துஷாராவைப் பொறுத்தவரை இயக்குநரின் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டு கச்சிதமாக நடிக்கிறார். அவருக்கும் அருள்நிதிக்கும் இடையேயான காதல் உடல்மொழி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. அறவே செயற்கைத்தனமில்லாத காதலை இருவரும் திரையில் பதிவு செய்துள்ளனர்.
"இந்தப் படத்துக்காக அருள்நிதி ஓராண்டு காலம் மீசை வளர்த்தார். அவரது முரட்டு மீசையும் தோற்றமும் ரசிகர்களைச் சற்றே மிரள வைக்கும். இது 'தேவர் மகன்', 'அசுரன்', 'பருத்திவீரன்' மாதிரியான படம் என்று சொல்லலாம். ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்க்கையில் நிகழும் சதி, துரோகம், காதல், வன்மம்தான் மொத்தக் கதை.
"எனது படங்களில் வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புவேன். 'உன் நியாயம், என் நியாயம் என்று தனித்தனியாக எதுவும் கிடையாது. நியாயம் என்பது எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கும்' என்று நடிகர் முனீஸ்காந்த் ஒரு காட்சியில் சொல்வார்.
"அப்படி இந்தப் படத்தின் கூர்மையான வசனங்கள் பேசப்படும். அருள்நிதி மூர்க்கசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப்பை பார்க்கலாம். மேலும் சரத் லோஹி தாஸ்வா, 'கன்னிமாடம்' சாயா தேவி, 'யார்' கண்ணன், ராஜசிம்மன், சக்குபாண்டி என கிராமத்துக் கதாபாத்திரங்களுக்கு வலு சேர்க்கக்கூடிய பலர் இப்படத்தில் பங்களித்துள்ளனர்.
"இமானின் இசையும், 'பரியேறும் பெருமாள்' தரின் ஒளிப்பதிவும் இந்தப் படத்துக்குப் பலம். 'ஜிப்ஸி', 'டாடா' படங்களைத் தயாரித்த அம்பேத்குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்," என்கிறார் இயக்குநர் கௌதமராஜ்.
, :
தமிழகத்