திரைப்பட நடிகையான பிறகு கிசுகிசுக்கள், வதந்திகள் குறித்துக் கவலைப்படுவது அர்த்தமற்றது என்கிறார் ஷ்ருதிஹாசன்.
ஆணவம் அதிகமுள்ள நடிகை என்று முன்பு தன்னை விமர்சித்தவர்களும்கூட இப்போது தன்னைப் பற்றி நன்கு புரிந்துகொண்டுள்ளனர் என்றும் அண்மைய பேட்டியில் இவர் குறிப்பிட்டுள்ளார்.
"முன்பெல்லாம் என்னைப் பற்றி தவறான, உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளிவந்தன. ஏன் இப்படியெல்லாம் தகவல் பரப்புகிறார்கள் என்று கவலைப்பட்டிருக்கிறேன். பிறகு ஒரு கட்டத்தில், சிலர் என்னைப் பற்றிய தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள் எனில் அதை மாற்றி அமைக்க வேண்டியது நாம்தான் என்ற முடிவுக்கு வந்தேன்.
"அப்போதுதான் ரசிகர்களுக்கு என்னைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை என்ற உண்மை புரிந்தது. அதன் பிறகு என்னைப் பற்றி நானே சமூக ஊடகங்களில் பதிவிடத் தொடங்கினேன்.
"தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இப்படிப் பொதுவெளியில் தகவல்களைப் பகிர்ந்துகொள்வது தவறு என்று சிலர் விமர்சித்தனர். நான் எதையும் வெளிப்படையாகப் பேசி, செயல்படக்கூடிய பெண்.
"என்னைப் போன்ற பெண்ணை நீண்ட நேரம் அமைதிகாக்கச் சொன்னால், அது சாத்தியமில்லை. அதனால் ஒருசிலர் மௌனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியபோது அதை ஏற்க மறுத்தேன். அப்போது சிலர் எனக்கு ஆணவம் அதிகம் என்று விமர்சித்தனர்.
"ஒருவர் நம்மைப் பற்றி தவறாகப் பேசும்போது, அதைத் தடுக்க நாம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் அதைத்தான் செய்தேன்," என்கிறார் ஷ்ருதிஹாசன்.
விமர்சனங்கள், எதிர்ப்புகளைக் கடந்து இன்றளவும் சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர், தனது பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தவும் அவை தொடர்பான கருத்துகள், தவறுகளைப் பகிர்ந்துகொள்ளவும் சமூக ஊடகங்கள் நல்ல தளமாக விளங்குவதாகச் சொல்கிறார்.
"கொரோனா நெருக்கடி காலத்தில்தான் சமூக ஊடகங்களில் அதிகம் இயங்கினேன். என்னைப் பற்றி ரசிகர்கள் அதிகம் அறிந்துகொள்ள கொரோனா முடக்கநிலை உதவியது. நான் இசையமைக்கும் பாடல்கள், அவற்றின் வரிகள் குறித்து யாராவது விமர்சித்தாலோ, மீம்கள் மூலம் கிண்டல் செய்தாலோ நான் கோபப்படுவதில்லை. ஆஹா... எனது பாடல் இந்த அளவுக்கு ரசிகர்களைச் சென்றடைந்துள்ளது என்று மகிழ்வேன்.
"எவ்வாறு படங்களைத் தேர்வு செய்கிறேன் என்பது குறித்து பலமுறை பேசியுள்ளேன். சில வித்தியாசமான கதைக்களம் உள்ள படங்களில் நடித்துள்ள போதிலும், திரைத்துறையில் வணிக ரீதியிலான வெற்றிகளும் அவசியம். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வசூல் ரீதியில் வெற்றி பெற்ற படங்களில் நான் பங்களித்துள்ளேன்.
"வயதான நடிகர்களுடன் இணைந்து நடிப்பது குறித்தும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அந்தப் படங்கள் ஜாலியான, உற்சாகமான அனுபவங்களைத் தருகின்றன. அதேசமயம் மூன்று பாடல் காட்சிகள், சில நகைச்சுவைக் காட்சிகளுடன் சராசரி நாயகியாக திரையில் தோன்றுவதை நான் அறவே விரும்புவதில்லை. எனது பல்வேறு திறமைகளில் ஏதாவது சிலவற்றை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளேன்," என்கிறார் ஷ்ருதி.
நடிகை, பின்னணிப் பாடகி, பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர் என்று தனக்குப் பிடித்தமான அனைத்திலும் தொடர்ந்து ஈடுபட விரும்புவதாகக் குறிப்பிடுபவர், திரையுலகில் அறிமுகமான புதிதில் தனது இசையார்வம் குறித்து எதுவும் பேசக்கூடாது என கட்டாயப்படுத்தப்பட்டதாகச் சொல்கிறார்.
கடந்த 2009ஆம் ஆண்டிலேயே தன் தந்தை நடித்த 'உன்னைப்போல் ஒருவன்' படத்துக்கு இசையமைத்துள்ளார் ஷ்ருதி. சில திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள நல்ல பாடல்களையும் பாடியுள்ளார்.
"ஆனால், நடிகையாக அறிமுகமானபோது இசை குறித்து ஏதும் பேசக்கூடாது என்றனர். காரணம், இசையில் ஆர்வம் இருப்பதால் நடிப்பில் போதுமான கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனம் எழும் என்றனர். ஆனால் இப்போது நிலைமை நன்கு மாறிவிட்டதாக உணர்கிறேன். இன்று பல்வேறு திறமைகள் கொண்டவர்களுக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது. எனவே எனது திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என உறுதியாக நம்புகிறேன்," என்கிறார் ஷ்ருதி.
, :
தமிழகத்

