'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடரில் நடித்து வரும் லாவண்யா (படம்) திரைத்துறையில் காலெடுத்து வைக்கிறார். 'ரேசர்' என்ற தலைப்பில் உருவாகும் புதுப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மாடலிங் துறையில் வெற்றிகரமாக வலம் வந்த லாவண்யாவுக்கு சின்னத்திரையில் நல்ல வரவேற்பு உள்ளது. 'சிப்பிக்குள் முத்து' தொடரில் அறிமுகமானவர், இப்போது 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் முல்லை கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்குப் பிடித்தமான நடிகையாகி உள்ளார்.
"சின்னத்திரைக் கலைஞர்களை பெரும்பாலானோர் தங்கள் குடும்ப உறுப்பினராகவே கருதி அன்பு பாராட்டுகிறார்கள். அண்மையில் சென்னையில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னைப் பார்த்த ஒரு பெண்மணி, 'உனக்காகவே அந்தத் தொடரை விடாமல் பார்த்து வருகிறேன். நன்றாக நடிக்கிறாய்' என்றார். இதுபோன்ற அங்கீகாரத்தையும் பாராட்டையும் இவ்வளவு சீக்கிரமாக நான் எதிர்பார்க்கவே இல்லை," என்கிறார் லாவண்யா.
நடிகையாக விரும்புவதாகச் சொன்னபோது லாவண்யா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதாம். ஆனால், அனைத்தையும் சமாளித்து முதலில் சில குறும்படங்கள், இசைத்தொகுப்புகளில் நடிக்கத் தொடங்கினார்.
"பெற்றோர் மட்டுமல்லாமல் என் மீது மிகுந்த பாசம் காட்டும் என் பாட்டிகூட ஆதரவாக இல்லை. உறவினர்கள் குறித்து கேட்கவே வேண்டாம். ஊடகத்துறைக்குச் சென்றபிறகு நான் அடியோடு மாறிவிட்டதாக குறைகூறினர். பிறகு, எனது ஆர்வத்தைப் பார்த்து என் வீட்டில் மெல்ல மெல்லப் புரிந்துகொண்டார்கள். ஒருமுறை அம்மா 'சூப்பர் குவீன்' நிகழ்ச்சியில் என்னுடன் படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போதுதான் நான் உட்பட அனைவரும் எவ்வளவு கடுமையாக உழைக்கிறோம் என்பதைப் பார்த்து மனம் மாறினார்," என்கிறார் லாவண்யா.