"அறிமுகப் படத்திலேயே பாரதிராஜாவை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது என்னுடைய பாக்கியம்,'' என்று பூரித்துப் போகிறார் ஹரீஷ் பிரபு. அவர் இயக்குநராக அறிமுகமாகி உள்ள 'திருவின் குரல்' படத்துக்கு விமர்சன ரீதியில் வரவேற்புக் கிடைத்துள்ளது.
தமிழில் பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்து வரும் லைக்கா நிறுவனத்தின் அடுத்த படைப்பு இது. அருள்நிதி நாயகனாகவும் ஆத்மிகா நாயகியாகவும் நடித்துள்ளனர். நாயகனின் தந்தையாக பாரதிராஜா நெகிழ வைக்கும் வகையில் நடித்துள்ளதாகச் சொல்கிறார் ஹரீஷ் பிரபு.
"தொடக்கத்தில் 'திரு.குரல்' என்றுதான் தலைப்பு வைத்திருந்தோம். நான் சொல்ல வரும் குரல் திருவள்ளுவர் எழுதியது அல்ல. கதாநாயகனின் பெயர் திரு. அவர், காது கேளாத, வாய்பேச முடியாதவர். அதனால் 'திருவின் குரல்' என்று தலைப்பு வைத்தேன்.
"நாயகனின் தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு சில சிக்கல்களை எதிர்கொள்ளும் நாயகன், அனைத்தையும் சமாளித்து எப்படி தந்தையைக் காப்பாற்றி எப்படி வீட்டுக்கு அழைத்து வருகிறார் என்பதுதான் கதை.
"கதைக் கேட்டதும் மருத்துவமனையில் இப்படியும் நடக்குமா என்று வியப்பும் கவலையுமாகக் கேட்டார் அருள்நிதி. மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.
"அவரது தந்தையாக பாரதிராஜா நடிக்கிறார் என்று சொன்னதும் அவரது ஆர்வம் மேலும் அதிகரித்தது. உடனே படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.
"படப்பிடிப்பு முடிந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு பாரதிராஜாவுக்கு உண்மையாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சந்திக்கச் சென்றேன். என்னைப் பார்த்ததும், 'சினிமாவுக்காக என்னை படுக்கையில் தள்ளிவிட்டீர்கள். இப்போது உண்மையாகவே நோயாளியாகிவிட்டேன்' என்று கிண்டல் செய்தார். அதைக் கேட்டதும் கண்கலங்கிவிட்டேன். அவர் நலமடைந்ததில் எல்லாருக்குமே மகிழ்ச்சி," என்கிறார் ஹரீஷ் பாபு.