சூர்யாவின் 42ஆவது படத்துக்கு 'கங்குவா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1984ஆம் ஆண்டு இதே தலைப்பில் ரஜினி இந்திப் படம் ஒன்றில் நடித்திருந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'சாம்பியன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் ராமராஜன். இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கி றார். இந்நிலையில் சித்திரைப் புத்தாண்டையொட்டி ராமராஜ னும் படக்குழுவினரும் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தனது 50ஆவது படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி.
விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.
தமிழ்த் திரையுலகில் நிறைய நட்சத்திர தம்பதிகள் உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்க சில தம்பதியர் திருமணத்துக்குப் பிறகும் சாதித்து வருகின்றனர்.
குறிப்பாக நடிகையாக இருந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நாயகிகள் சிலர், திருமணத்துக்குப் பின்னர் கணவருக்குப் பக்கபலமாக நிற்கிறார்கள்.
நடிப்பு, இயக்கம், படத் தயாரிப்பு என பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்படச் செயல்படும் அவர்களுக்கு ரசிகர்களின் ஆதரவும் தொடர்ந்து கிடைத்து வருகிறது.
கோடம்பாக்கத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்த சுஹாசினி, குஷ்பு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் இப்போது இல்லத்தரசிகளாக இருந்தபடியே திரையுலகிலும் வெற்றிநடை போட்டு வருகிறார்கள்.
'பாகுபலி' போன்ற ஒரு படைப்பு தமிழில் உருவாகவில்லையே' என்ற ஏக்கத்தைப் போக்கியுள்ளது 'பொன்னியின் செல்வன்' திரைப்படம். அதன் இரண்டாம் பாகமும் விரைவில் திரைகாண உள்ளது. வசூல் ரீதியில் இந்தப் படம் பல சாதனைகளைப் படைக்க, இயக்குநர் மணிரத்னத்துக்குத் துணை நின்றவர் அவரது மனைவியும் நடிகையுமான சுஹாசினி.
"படத்துக்கான விளம்பர திட்டங்களை வகுத்துக் கொடுத்தது அவர்தான். அதனால்தான் தமிழகத்தின் பட்டி தொட்டி மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இப்படத்தின் முன்னோட்ட காட்சித் தொகுப்பு, பாடல்கள் எல்லாம் அனைத்து மூலை முடுக்குகளையும் சென்றடைந்தன.
"மேலும், படத்தின் கதை விவாதம் தொடங்கி, ஒவ்வொரு காட்சியின் தன்மை குறித்தும் தன் மனதிற்பட்ட கருத்துகளை கணவருடன் விவாதித்துள்ளார் சுஹாசினி.
அனைத்து வகையிலும் அவர் துணை நின்றதால்தான் 'பொன்னியின் செல்வன்' படத்துக்கும் முன்பே பல பிரம்மாண்ட படைப்புகளைத் தம்மால் தர முடிந்தது என்று மணிரத்னமே கூறியுள்ளார்," என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
தமிழில் ஜனரஞ்சகமான படங்களைத் தந்தவர்கள் பட்டியலில் இயக்குநர் சுந்தர்.சிக்கு நிச்சயம் இடமுண்டு. அவர் இயக்கும் படங்களை அவரது மனைவியும் நடிகையுமான குஷ்புவே அவ்வப்போது தயாரிக்கிறார்.
திரையுலகில் தனது வெற்றிக்குப் பக்கபலமாக இருப்பது மனைவி குஷ்புதான் என்று சுந்தர்.சி.யும் பலமுறை வெளிப்படையாகக் கூறியுள்ளார். படத் தயாரிப்புப் பணிகளை தன் மனைவி திறம்படவும் திட்டமிட்டும் மேற்கொள்வதாக சுந்தர்.சி. பாராட்டியும் உள்ளார்.
ஒரு பக்கம் அரசியல், மறுபக்கம் தொழில் நடவடிக்கைகள் என இரண்டிலும் உரிய கவனம் செலுத்தி, குடும்பத்தையும் வழிநடத்துகிறார் குஷ்பு.
நடிகராகத் தாம் விரும்பும் கதாபாத்திரங்கள், கதைக் களங்கள் அமையாத பட்சத்தில் சொந்தமாக படம் தயாரித்து அந்த விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்கிறார் சூர்யா.
அவரது இந்த முயற்சிக்குத் துணை நிற்பவர் மனைவி ஜோதிகா. அதேசமயம் ஜோதிகாவுக்காக சில படங்களைத் தயாரிக்கவும் சூர்யா தவறுவதில்லை. இருவரும் இணைந்து வழிநடத்தும் படத் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கும் படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று வருகின்றன.
நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய ஆர்யா, திருமணத்துக்குப் பிறகு தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். அவரது சொந்தப் படங்களைத் தயாரிக்க மனைவி சாயிஷா துணை நிற்கிறார்.
திருமணத்துக்குப் பின்னர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பிறகும் சாயிஷா தொடர்ந்து நடித்து வருகிறார். மிகவும் பிடித்தமான கதை, கதாபாத்திரங்களில் மட்டுமே அவர் நடிப்பார் என்றும் அதற்கு தமது ஆதரவு எப்போதும் உண்டு என்றும் கூறுகிறார் ஆர்யா.
படத் தயாரிப்பு, ஆடை வடிவமைப்பு, கதாபாத்திரம் பிடித்திருந்தால் நடிப்பு என்று திட்டமிட்டுச் செயல்படும் சாயிஷா, நல்ல நடனக் கலைஞரும் ஆவார். அவ்வப்போது தனது நடனக் காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.
திரைத்துறையில் சம்பாதித்ததை மீண்டும் அதிலேயே முதலீடு செய்யும் ஒருசில நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். இருபது ஆண்டுகளாக திரையுலகில் வலம் வரும் அவர், கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து படத் தயாரிப்பு, விநியோகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகை ராதிகா சொந்தமாக சின்னத்திரை தொடர்களைத் தயாரித்து நாயகியாக நடிப்பதுடன், படத் தயாரிப்பு நிறுவனத்தையும் வழி நடத்துகிறார். மேலும், பிடித்தமான கதாபாத்திரங்கள் அமையும்போது திரைப்படங்களிலும் ராதிகாவைப் பார்க்க முடியும். அரசியல் களத்திலும் தனது கணவர் சரத்குமாருக்கு பக்கபலமாக உள்ளார்.

