பேய் கதைகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு என்கிறார் யாஷிகா ஆனந்த்.
தற்போது 'சைத்ரா' என்ற படத்தில் இவர் பேய் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். "இளம்பெண் இருபத்து நான்கு மணி நேரத்தில் எதிர்கொள்ளும் சம்பவங்களின் தொகுப்புதான் இந்தப் படம். படப்பிடிப்பின்போதே திகிலாக உணர்ந்தேன். இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களை அலற வைக்கும்," என்கிறார் யாஷிகா ஆனந்த்.
இந்தி நடிகர் சல்மான் கானை காதலிப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் பூஜா ஹெக்டே. தமக்குத் திருமணமாகிவிட்ட தாகக்கூட சிலர் வதந்தி பரப்புகிறார்கள் என்றும் தமக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
"தனியாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என் மனதை ஆக்கிரமித்துள்ளது," என்கிறார் பூஜா.
எனினும் அண்மையில் சல்மான்கான் நடித்து தயாரித்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் பூஜா. தாம் அடுத்து நடிக்கும் படத்திலும் பூஜாவை நாயகியாக பரிந்துரை செய்துள்ளாராம் சல்மான்.
இதுதான் அவரை மையமாக வைத்து பரப்பப்படும் காதல், திருமணம் தொடர்பான கிசுகிசுக்கள் அதிகரிக்கக் காரணமாக உள்ளது.
ரசிகர்கள் சிலரது 'செல்ஃபி' எடுக்கும் மோகத்தால் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார் முன்னாள் நாயகி நவ்யா நாயர்.
திருமணத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ரசிகர்கள் அளிக்கும் ஆதரவு மகிழ்ச்சி அளித்தாலும் சில ரசிகர்கள் நடந்துகொள்ளும் விதம் வேதனை அளிக்கிறது என்கிறார்.
"சிலரது 'செல்ஃபி' மோகம் எல்லை மீறுவதாக உள்ளது. உடல்நலம் குன்றி, மருத்துவமனையில் இருக்கும்போதும் 'செல்ஃபி' எடுக்க வருகிறார்கள். ஒருமுறை இறுதிச்சடங்கில் பங்கேற்கச் சென்றபோது, அங்கேயும் சிலர் 'செல்ஃபி' எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். ரசிகர்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்," என்கிறார் நவ்யா.

