'இவன் நெருப்பு மனிதன்'

'இவன் நெருப்பு மனிதன்'

3 mins read
158e8c91-8830-40bb-ae6d-56a02d62a698
-

கடந்த சில மாதங்­க­ளாக 'சூர்யா 42' என்று ரசி­கர்­கள் குறிப்­பிட்டு வந்த படத்­தின் தலைப்பு அதி­கா­ரபூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 'கங்­குவா' என்ற தலைப்பு சூர்யா ரசி­கர்­களை வெகு­வா­கக் கவர்ந்­துள்­ளது.

'சிறுத்தை' சிவா இயக்­கத்­தில் சூர்யா நடிக்­கும் இந்­தப் படம் குறித்த எதிர்­பார்ப்பு அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது. இந்­நி­லை­யில், படத்­தின் தலைப்பு, கதை, படப்­பி­டிப்பு குறித்து சுவா­ர­சி­ய­மான தக­வல்­க­ளைப் பகிர்ந்­துள்­ளார் சிவா.

"கங்கு என்­றால் தமி­ழில் தீ என்று அர்த்­தம். கங்­குவா என்­றால் நெருப்­பின் சக்திகொண்ட மனி­தன் என்று அர்த்­தம். அதற்காக கங்­குவாவுக்கு பல்வேறு பெரும் ஆற்­றல், சக்­தி­கள் இருப்பதாக நினைத்­து­விட வேண்­டாம்.

"பண்­டைய காலத்­தில் நாம் நெருப்பை வணங்கி­யுள்­ளோம். அது தொடர்­பான சில அம்­சங்­களை இந்­தப் படத்­தில் பயன்­ப­டுத்தி உள்­ளேன். சூர்­யா­வின் கதா­பாத்­தி­ரம் கதா­நா­ய­க­னுக்­கு­ரிய அனைத்து அம்­சங்­க­ளு­டன் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது," என்­கி­றார் இயக்­கு­நர் சிவா.

'கங்­குவா' என்ற தலைப்­பில் பல ஆண்­டு­களுக்கு முன்பு ரஜினி நடித்த இந்­திப் படம் நல்ல வசூல் கண்­டது. அது தமி­ழில் வெளி­யாகி வெற்­றி­பெற்ற 'மலை­யூர் மம்­பட்­டி­யான்' படத்­தின் மறு­ப­திப்­பா­கும்.

இந்­நி­லை­யில், ரஜினி நடித்த அந்த இந்­திப் படத்தை தழுவி 'கங்­குவா' உரு­வா­கிறது என்ற தக­வலை படக்­குழு திட்­ட­வட்­ட­மாக மறுத்­துள்­ளது.

"ஒரு கற்­பனை உல­கத்தை உரு­வாக்க வேண்­டும். அதை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு ஒரு திரைப்­ப­டத்தை உரு­வாக்க வேண்­டும் என்­பது எனது நீண்ட நாள் விருப்­பம். இந்­தப் படத்­தில் 1,500 ஆண்­டு­க­ளுக்கு முந்­தைய தமிழ்க் கலாசாரத்­தை­யும் அதன் கூறு­க­ளை­யும் பயன்­படுத்தி உள்­ளோம்.

"கங்­குவா என்­பது ஒரு கற்­பனை உல­கில் வலு­வான வர­லாற்­றுக் குறிப்­பு­கள், உண்­மை­களைக் கொண்ட ஒரு கற்­ப­னைக் கதை­யா­கும். ரசி­கர்­க­ளுக்­குப் பிடித்­த­மான வகை­யில் திரைக்­கதை, வச­னங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன," என்­கி­றார் சிவா.

'கங்­குவா' திரைப்­ப­டத்­திற்கு தேவி ஸ்ரீ பிர­சாத் இசை­ய­மைக்­கி­றார். அவர் இசை­ய­மைத்த 'புஷ்பா' படத்­தின் பாடல்­கள் பட்­டி­தொட்­டி­யெங்­கும் வர­வேற்பு பெற்­ற­தால், 'கங்­குவா' படத்­தின் இசை உரி­மையை சரி­கம நிறு­வ­னம் ரூ.10 கோடிக்கு வாங்கி உள்­ளது. இதற்­கான அதி­கா­ர­பூர்வ அறி­விப்­பும் வெளி­யாகி உள்­ளது. மேலும் இப்­ப­டத்­தின் இந்தி உரிமை பெருந்தொகைக்கு விற்­பனை ஆகியுள்­ள­தா­கத் தக­வல்.

பல நூற்­றாண்­டு­க­ளுக்கு முந்­தைய சம்­பவங்­களைக் காட்­சிப்­ப­டுத்த உள்­ள­தால், கலை இயக்கு­நர் மிக­வும் மெனக்­கெட்­டுள்­ள­தா­கப் பாராட்­டு­கி­றார் சிவா.

"முதல் காட்சி தொடங்கி இறு­திப்­ப­குதி வரை ரசி­கர்­களை நான் உரு­வாக்­கிய கற்­பனை உல­கத்­துக்­குள் வலம்­வ­ரச் செய்ய வேண்­டும். இது மிகப்­பெ­ரிய சவால். எனி­னும் ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வும் இதற்­கா­கக் கடி­ன­மாக உழைத்து வரு­கி­றோம்.

"'கங்­குவா' படத்­தின் உரு­வாக்­கம் தொடர்­பான காணொளி விரை­வில் வெளி­யி­டப்­படும். அதைப் பார்க்­கும்­போது இப்­ப­டத்­தின் தலைப்பு, கதை குறித்து ரசி­கர்­கள் தெளி­வு­பெற முடி­யும். தற்­போது தலைப்பை அறி­மு­கப்­ப­டுத்­தும் வித­மாக வெளி­யி­டப்­பட்­டுள்ள காணொ­ளி­யில் இடம்­பெற்­றுள்ள நாய், குதிரை, சூர்யா அணிந்­துள்ள முக­மூடி என எல்லாவற்றுக்கும் உரிய கார­ணங்­கள் உள்­ளன. காணொளி­யின் தொடக்­கத்­தில் காணப்­படும் கழுகு கதை­யில் முக்­கிய பங்கு வகிக்­கும்," என்­கி­றார் சிவா.

'கங்­குவா' படத்தை பத்து மொழி­களில் வெளி­யிட உள்­ள­னர். மேலும் முப்­ப­ரி­மாண (3டி) தொழில்­நுட்­பத்­தில் உரு­வாகி உள்­ளது இப்­ப­டம். இத­னால் ரசி­கர்­கள்­ வித்தி­யா­ச­மான, உற்­சா­க­மான உணர்­வைப் பெற முடி­யும் என்­கிறது படக்­குழு. தற்­போது படத் தயா­ரிப்­புப் பணி­யில் ஐம்­பது விழுக்­காடு முடிந்­துள்­ளது. அடுத்த ஆண்டு தொடக்­கத்­தில் படம் வெளி­யீடு காணும்.

"சூர்­யா­வு­டன் இணைந்து பணி­யாற்­று­வது அரு­மை­யான, மிக­வும் விரும்­பத்­தக்க அனு­ப­வம். தன்­னு­டைய படத்­துக்­கா­க­வும் கதா­பாத்­தி­ரத்­துக்­கா­க­வும் தன்­னி­டம் உள்ள அனைத்­தை­யும் கொடுக்­கக் கூடி­ய­வர் சூர்யா. இந்­தப் படத்­துக்­கும் தனது உழைப்­பை­யும் அர்ப்­பணிப்­பை­யும் குறை­வின்றி வழங்கியுள்­ளார்.

"பிரம்­மாண்ட படைப்­பு­களுக்கு தயா­ரிப்­பா­ள­ரின் ஆத­ரவு மிக முக்­கி­யம். அந்த வகை­யில் ஞான­வேல் ராஜா ஒரு தயா­ரிப்­பா­ள­ராக நாங்­கள் கேட்ட அனைத்­தை­யும் கொடுத்­துள்­ளார். இப்படம் திட்­ட­மிட்­ட­படி திரை­காண்­பதில் அவ­ரது பங்­க­ளிப்பு இன்­றி­ய­மை­யா­த­தாக இருக்­கும்," என்­கி­றார் சிவா.