நடிகர் சந்தானம் அடுத்து நகைச்சுவை நடிகர் 'காதல்' சுகுமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
இத்தகவலை பகிர்ந்துள்ள சுகுமார், இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறிஉள்ளார்.
சந்தானத்தின் நெருங்கிய நண்பர்களில் 'காதல்' சுகுமாரும் ஒருவர். ஆறு மாதங்களுக்கு முன் சந்தானத்தைத் தொடர்புகொண்டு கதைக்கருவை தெரிவித்துள்ளார் சுகுமார். அதைக்கேட்டதும் அருமையாக இருப்பதாகச் சொன்னாராம் சந்தானம்.
அதன் பின்னர் கதையை மெருகேற்றிய சுகுமார், 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் படப்பிடிப்பில் இருந்த சந்தானத்தை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசி முழுக் கதையையும் விவரித்துள்ளார்.
"கதையைக் கேட்டதும் சந்தானம் வெகுவாகப் பாராட்டினார். அதன் பிறகு எனது நண்பர் ஒருவரை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, 'சுகுமார் சொன்ன கதை அருமை. அவரது இயக்கத்தில் நடிப்பது எனது கடமை.
"சுகுமார் நிறைய படங்களில் பணியாற்றி பெரிய இடத்தை அடைய வேண்டும். சுகுமார் நன்றாக இருந்தால் நாம் அனைவருமே நன்றாக இருப்போம்' என்று சந்தானம் மனம் திறந்து பேசியுள்ளார். அவருக்கு நன்றி," என்கிறார் சுகுமார்.

