இந்தியாவில் உருவாகும் குறும்படங்கள் உலகளவிலான திரைப் படைப்பாளிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இந்திய குறும்படங்கள் ஆஸ்கர் விருதுகளைப் பெறும் அளவுக்குத் தரமான படைப்புகளாக இருப்பதே இதற்குக் காரணம்.
அந்த வகையில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு ஏராளமான விருதுகளை வாரிக்குவித்து வருகிறது 'காகிதம்' என்ற குறும்படம். இதை வினோத் வீரமணி இயக்கி உள்ளார்.
இக்குறும்படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி அதை வெளியிட்டார்.
இது, வாழ்க்கையின் யதார்த்தமான பகுதியைப் படம்பிடித்துக் காட்டும் படைப்பு என்கிறார் இயக்குநர் வினோத் வீரமணி.
"இந்தக் குறும்படம் நம் எண்ணங்களைப் பிரதிபலிக்கக் கூடிய தன்மையிலான கதை என்று கூற முடியாது. இது ஒரு கதையும் அல்ல, வாழ்க்கையின் யதார்த்தம்.
"மனித வாழ்க்கை என்பது ஒரு காகிதம் போன்றது. அந்தக் காகிதத்தை என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அதில் ஓவியம் தீட்டுவதா அல்லது எதையாவது கிறுக்கி வைப்பதா என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.
"ஆறு வயதுச் சிறுமி தன்னைச் சுற்றியுள்ள சூழலை எப்படி அடையாளம் கண்டுகொள்கிறாள் என்பதையும் தனக்கான வாய்ப்புகளை எவ்வாறு அமைத்துக்கொள்கிறாள் என்பதையும் அலசியுள்ளோம்," என்கிறார் வினோத் வீரமணி.
'ஓஷன்ஸ் ட்ராப்ஸ் புரொடக்ஷன்ஸ்' சார்பில் தீபா இஸ்மாயில் இக்குறும்படத்தைத் தயாரித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுமி மதிஹாவின் நடிப்பு அருமை எனப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
உரிமையும் வெற்றியும் இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் சமமானது என்ற கருத்தை 'காகிதம்' குறும்படம் வலியுறுத்துவதாகச் சொல்கிறார் தீபா.
இன்றும்கூட சமுதாயத்தில் மிகச் சிறந்த ஆற்றலும் அறிவும் படைத்த பெரும்பாலான மக்கள், குறைந்தபட்ச சமுதாய மதிப்பும் இல்லாது வாழ்வதாக இவர் ஆதங்கப்படுகிறார்.
மேலும் பல திறமைசாலிகள் உரிய அடையாளமும் கிடைக்காமல் உழல்வதாகவும் உரிமை கிடைக்காமல் தவிப்பதாகவும் சொல்கிறார் தீபா.
"சமுதாயத்தின் மேல்தட்டுக்கும் கீழ்த்தட்டுக்கும் இடையே இருப்பது ஒரு சிறுகோடுதான். அதுதான் வறுமைக்கோடு. மற்றபடி இங்கு அனைவரும் அனைவருக்கும் சமமே.
"இதன் அடிப்படையில் ஒரு கதையை உருவாக்கி அதை இயக்குநர் வினோத் எங்களுக்கு விவரித்த விதம் சிறப்பாக இருந்தது. இந்தக் குறும்படம் சிறந்த படைப்பாக உருவாகி உள்ளது," என்கிறார் தயாரிப்பாளர் தீபா இஸ்மாயில்.
இதுவரை 35 விருதுகளைப் பெற்றுள்ளது இக்குறும்படம். சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த இயக்குநர், சிறந்த குறும்படம், சிறந்த கதை, சிறந்த பாடல் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் கிடைத்துள்ளன.
"கதை நாயகியாக நடித்துள்ள சிறுமி மதிஹாவின் நடிப்பைக் கண்டு பாராட்டாதவர்்களே இல்லை.
"அச்சிறுமிக்கு அனைத்துலக அளவில் விருதுகளும் அங்கீகாரமும் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக 'காகிதம்' குழுவினர் கூறுகின்றனர்.