'பொன்னியின் செல்வன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க முடிந்ததாகச் சொல்கிறார் சோபிதா துலிபாலா.
முதல் பாகத்தில் ஒரு பாடல் காட்சியிலும் திரிஷாவுடன் ஒன்றிரண்டு வசனக் காட்சிகளிலும் மட்டுமே இவரைக் காண முடிந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில் தமது கதாபாத்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்.
"திரிஷா, ஐஸ்வர்யா ராய் என இரண்டு பெரிய கதாநாயகிகள் இருக்கும் படத்தில் எனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது என்று சிலர் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இரண்டாம் பாகத்தைப் பார்த்த பின்பு யாரும் இப்படிப்பட்ட கருத்தை வெளிப்படுத்த மாட்டார்கள்.
"ஏனெனில், 'பொன்னியின் செல்வன்' படத்தின் உண்மையான கதாநாயகன் ஜெயம் ரவி என்றால், அவரைச் சிறு வயது முதல் காதலிக்கும் பெண்ணாக நடித்துள்ள நான்தான் கதாநாயகி என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
"எனினும் இது மணிரத்னம் எனும் ஒட்டுமொத்த இந்தியாவும் பார்த்து வியக்கும் இயக்குநரின் படைப்பு. இதில் எனக்கு அழகான இளவரசி கதாபாத்திரத்தைத் தந்துள்ளார். அதனால் ஏற்பட்டுள்ள மன நிறைவும் முதல் பாகத்தின் வெற்றியை இரண்டாம் பாகம் நிச்சயமாக விஞ்சும் என்கிற பெருமையும் மட்டும் இப்போதைக்கு எனக்குப் போதும்," என்கிறார் சோபிதா.
இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலத்தில் உள்ள தெனாலி நகரம். தந்தை பொறியாளர். தாயார் பள்ளி ஆசிரியை. மூத்த சகோதரி உள்ளார்.
பெற்றோர் நன்கு படித்தவர்கள் என்பதால் இரு மகள்களும் கல்வியில் சிறக்க வேண்டும் என விடாமல் வலியுறுத்திக்கொண்டே இருப்பார்கள். சோபிதாவின் பள்ளி நாள்கள் விசாகப்பட்டினம் நகரில் கழிந்துள்ளன. பின்னர் கல்லூரிப் படிப்புக்காக குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளது.
"அந்தச் சமயத்தில் மும்பையில் நடைபெற்ற 'மிஸ் இந்தியா' அழகிப் போட்டியில் பங்கேற்குமாறு தோழிகள் வற்புறுத்தினர்.
"என் மீது மற்றவர்கள் நம்பிக்கை வைக்கும்போது, அதை நாம் ஏன் பின்பற்றக்கூடாது என்று தோன்றியது.
"2013ஆம் ஆண்டு நடைபெற்ற 'மிஸ் இந்தியா' போட்டியில் பங்கேற்று 'டாப் 20' அழகிகளில் ஒருவளாக தேர்வு பெற்றேன். மேலும் 'மிஸ் இந்தியா சவுத்' பட்டத்தையும் வென்றேன்.
"அதன் பிறகு மாடலிங் துறை என்னை ஈர்த்துக் கொண்டது. பல்வேறு ஆடை அறிமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் விளம்பரங்களில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் தேடி வந்தன. அப்போது எதிர்பாராத வகையில் இந்தி இயக்குநர் அனுராக் கஷ்யப்பின் 'ராமன் ராகவ் 2.0' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.
"அறிமுகப் படத்தில் நான் சிறப்பாக நடித்திருந்ததாக எல்லோரும் பாராட்டினர். கான் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதுப் பிரிவில் நான் பரிந்துரைக்கப்பட்டேன். மேலும், கான் விழாவில் சிவப்புக் கம்பள வரவேற்பும் பெற்றேன்.
"அறிமுக நடிகைக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைப்பது சாதாரண நிகழ்வல்ல. அனுராக் காஷ்யப் படத்தில் அறிமுகமான ஒரே காரணத்தால் கிடைத்த அங்கீகாரம் இது. கான் விருது கிடைக்காவிட்டாலும் அங்கே எனக்குக் கிடைத்த பாராட்டும் வரவேற்பும் நல்ல கதை, கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கும் நடிகையாக என்னை மாற்றியது எனலாம்," என்று சொல்லும் சோபிதா, மணிரத்னம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது என்கிறார்.
தமக்கு நடனத்தில் ஆர்வம் அதிகம் என்றும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாடல்களில் அழகான அசைவுகளுடன் நடனமாடி உள்ளது கூடுதல் மகிழ்ச்சி அளித்துள்ளது என்றும் சொல்கிறார்.
"திரிஷாவும் ஐஸ்வர்யா ராயும் திரைஉலகில் நிறைய சாதித்தவர்கள். அவர்களுடன் இணைந்து நடித்தது பெரும் மகிழ்ச்சி அளித்தது. திரிஷா நிகழ்காலத்தின் ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழும் அற்புதமான பெண். படப்பிடிப்புக்கு வெளியேயும் அவரை 'அக்கா' என்றே அழைப்பேன். அதை அவர் மிகவும் ரசிப்பார்.
"ஐஸ்வர்யா ராய் புகழின் உச்சியைத் தொட்டவர். அவருடன் இரண்டு முறை மட்டுமே பேச முடிந்தது. எனினும் அந்த இரு சந்திப்புகளின் மூலம், அவர் உச்சத்தை தொட என்ன காரணம் என்பதை என்னால் உணர முடிந்தது. "அவர் மிகவும் அடக்கமானவர். ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்காக தம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் உன்னதமான நடிகை," என்று பாராட்டித் தீர்க்கிறார் சோபிதா துலிபாலா.

