விஜய் ஆண்டனி நடித்திருக்கும் 'பிச்சைக்காரன் 2' படம் ஏப்ரல் 14ல் வெளியாகாத வண்ணம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு படத்தை நிறுத்தி வைத்தனர். இதனால் படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி, "பிச்சைக்காரன் 2' படம் தள்ளிப்போனதால் மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. படம் வெளியாவதைத் தடுக்க திட்டமிட்டு வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் கடைசி நேரத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் நான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன்," என்று கூறியுள்ளார்.
குணசேகரன் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் 'சாகுந்தலம்'. சரித்திரக் கதையில் உருவான இந்த படம் ரூ.40 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இந்தப் படத்தின் வெளியீடு பல முறை மாற்றப்பட்டு இறுதியாக இம்மாதம் 14ஆம் தேதி வெளியானது. படம் வெளியானதில் இருந்து நேற்று வரை மொத்தமாகவே ரூ.10 கோடிதான் வசூலை எட்டி இருப்பதாக கூறப்படுகிறது. படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்த சமந்தா கடும் மன உளைச்சலில் இருப்பதாக டோலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய்சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்தை மாஸ்கோ அனைத்துலக திரைப்பட விழாவில் இன்று முதல் ஏப்ரல் 27 வரையிலான நாள்களில் திரையிட உள்ளனர். இதற்காக அண்மையில் சீனு ராமசாமிக்கு, ரஷ்யன் மையம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் சீனு ராமசாமி பேசியபோது, "ரஷ்யா நாட்டில் 'மாமனிதன்' திரைப்படம் திரையிடப்பட இருப்பது, எனக்கு பெருமையாக உள்ளது. நான் சினிமாவிற்கு வந்த நோக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறி வருகின்றன. 'மாமனிதன்' திரைப்படம் திரையரங்கில் வெளியானபோது, வெறும் 20 விழுக்காடு பார்வையாளர்களை மட்டுமே பெற்றது. ஆனால், 'ஆஹா' இணையத்தளத்தில் மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இனி நான் விஜய் சேதுபதியுடன் இணையும் வாய்ப்பு கிடையாது. 12 ஆண்டுகளில் நான்கு படங்களை விஜய் சேதுபதியை வைத்து இயக்கி உள்ளேன். நான் இறந்தாலும் இந்த படங்கள் பேசும்," என்று தெரிவித்துள்ளார்.

