முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடிப்பது முக்கியம் என்றாலும், நாயகியை மையப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார் பூஜா ஹெக்டே.
நகைச்சுவை வேடங்களில் நடிக்க விரும்புவதாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"கடந்த ஆண்டு தமிழில் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்துக்கு வசூல் ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 'அரபிக்குத்து' பாடல் மூலம் நான் பட்டித்தொட்டி எங்கும் அறிமுகமாகிவிட்டேன்.
"பல்வேறு தரப்புகளில் இருந்தும் எனக்குப் பாராட்டுகள் கிடைத்தன. அவை மேலும் உற்சாகத்துடன் நடைபோட உதவுகின்றன.
"நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். இதற்கு முன்பு சில படங்களில் சிறிய நகைச்சுவைப் பகுதிகளில் நடித்துள்ளேன். உணர்வுபூர்வமான வேடங்களில் நடிக்கும்போது நிறைய மெனக்கெட வேண்டி யிருக்கும்.
"படப்பிடிப்புக்கு நம்மை தயார்படுத்திக்கொள்வது முக்கியம். அன்றைய தினம் என்னென்ன காட்சிகள் படமாக்கப்பட உள்ளன என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, அதற்குத் தயாராக படப்பிடிப்புக்குச் செல்வேன்.
"ஆனால் நகைச்சுவை வேடங்களுக்கு அத்தகைய முன்னேற்பாடுகள் ஏதும் தேவையில்லை. காட்சியைப் படமாக்கும்போது நம் மனதில் உள்ள நகைச்சுவையை வெளிப்படுத்தினால் போதும். மேலும், படப்பிடிப்பின்போதே அந்த நகைச்சுவையை மெருகேற்றவும் செய்யலாம்.
"நகைச்சுவையாக நடிப்பது என்பது பெரும் சவால். ஏனெனில் நாம் நினைத்த பொழுதில் ஒருவரை சிரிக்கவைக்க முடியாது. அதற்குத் தனித்திறமையும் ஆற்றலும் வேண்டும். எனவே அத்தகைய ஆற்றலைப் பெற வேண்டும் என விரும்புகிறேன். அனுபவம் அதற்கு உதவும்," என்கிறார் பூஜா.
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் இந்தித் திரையுலகிலும் பூஜாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அனைத்து படங்களிலும் மொழி தெரிந்து நடிக்க வேண்டும் என்று விரும்பு வதாகச் சொல்கிறார்.
"மொழி தெரிந்து நடிக்கும்போது நாம் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போகலாம். மேலும், அந்தக் கதாபாத்திரத்தின் உரிமையாளர் நான்தான் என்றும் உரிமையுடன் சொல்ல முடியும்.
"இதுவரை எனக்கான திரையுலக அனுபவங்களின் மூலம் சில வெற்றிப்படங்களில் நடித்துள்ளேன். கதைகளைத் தேர்வு செய்வதில் பக்குவம் அடைந்திருக்கிறேன். முக்கியமாகக் குறிப்பிடும் வகையில் எதுகுறித்தும் நான் யோசித்தது கிடையாது.
"ஆனால் இனிமேல் நல்ல கதைக்களங்கள், கதாபாத்திரங்களை ஏற்க விரும்புகிறேன். குறிப்பாக, பெண்களை மையப்படுத்தும் கதைக்களங்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன். இத்தகைய படங்களில் அதிகம் நடிக்க விரும்பும் அதே வேளையில் காதல் படங்களிலும் தொடர்ந்து நடிப்பேன்.
"ஏனெனில் மனதளவில் காதல் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. காதல் கதாபாத் திரங்களில் நடிக்கும்போது இனம்புரியாத பரவசம் ஏற்படும்," என்று சொல்லும் பூஜாவுக்கு, அடிதடி சண்டை காட்சிகள் உள்ள படத்தில் நாயகியாக நடிக்கும் ஆசையும் உள்ளதாம்.
மேலும் குழந்தைகளை முன்னிலைப்படுத்தும் படத்திலும் நடிக்க விரும்புகிறார்.
"ஊடகத் துறையில் உள்ளவர்களுடன் நான் அதிகம் பேசுவதில்லை என்று ஒரு விமர்சனம் உள்ளது. உண்மையில் நான் யாரையும் புறக்கணிப்பது இல்லை.
"திடீரென நான் நடிக்கும் படங்களைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்கிறார்கள். ஆனால் அவ்வாறு செய்ய எனக்கு அனுமதி இல்லை எனும்போது நான் என்ன செய்ய முடியும். ஆனால் இதை அடிப்படையாகக் கொண்டு என்னைக் குறை சொல்கிறார்கள். எனவே இதுகுறித்து கவலைப் படுவதில்லை.
"தமிழ்ப் படங்களில் தொடர்ந்து நடிப்பேன். அதேசமயம் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட பிற மொழிப் படங்களிலும் கவனம் செலுத்துகிறேன்.
"கனவுக் கதாபாத்திரம் குறித்த எனது எண்ணம் பின்னாள்களில் மாறக்கூடும். எனினும் பெண்களைப் பெருமைப்படுத்தக் கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் மட்டும் நிச்சயம் மாறாது," என்கிறார் பூஜா ஹெக்டே.

