திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read

 அண்மையில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்துப் பேசியுள்ளார் நடிகர் சூர்யா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இருவரும் தத்தம் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு சச்சின் பதிலளித்துள் ளார். "இருவரும் தொடக்கத்தில் பேசுவதற்குத் தயங்கினோம். ஒருவரையொருவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை, ஆனால் இறுதியில் இருவரும் நன்றாக பேசிக்கொண்டோம்," என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

 மீண்டும் திரைப்படங் களில் நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.

புதுப் படம் ஒன்றில் ஏற்றுக்கொண்டுள்ள வித்தியாசமான கதாபாத்திரத்துக்காக தற்காப்புக் கலை கற்று வருவதாகவும் குதிரைப் பயிற்சி மேற்கொண்டுள்ள தாகவும் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்துள்ளேன். எனது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இதைக் கருது கிறேன். தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் எல்லாப் பெண்களுமே சாதித்துக்காட்ட முடியும். இதை தினமும் எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்," என்கிறார் ஏமி.

ஒரு பக்கம் நடிப்பு, மறுபக்கம் சமூக சேவை என்று செயல்படுகிறாராம். குறிப்பாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு உதவுவதற்கு முன்னுரிமை அளிக்கிறார். இதற்காக சென்னையைச் சேர்ந்த ஒரு சேவை அமைப்போடு இணைந்து செயல்படுகிறார் ஏமி.

 'பிக்பாஸ்' புகழ் நடிகை ஷெரீன் சமூக ஊடகங் களில் பரபரப்பாக இயங்கும் நடிகைகளில் ஒருவர். சினிமா வாய்ப்புகள் எதிர் பார்த்தபடி அமையாததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவர் அறிவித்துள்ளார். "ஜாதகப்படி, எதிர்வரும் அக்டோபர் மாதம்தான் எனக்குத் திருமணம் நடக்கும் எனக் கணித்துள்ளனர். எனினும் அடுத்த மாதமே திருமணம் நடக்கும் என்றும் மற்றொரு கணிப்பு கூறுகிறது. எது எப்படியோ, விரைவாக திருமணம் செய்துகொள்ளலாம் என்ற முடிவில் உள்ளேன்,"

என்கிறார் ஷெரீன். இதையடுத்து சமூக ஊடகங்களில் அவருக்கு இப்போதே வாழ்த்துகள் குவிகின்றன.

 சங்கர் இயக்கத்தில், ராம் சரண் நாயகனாக நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்துக்காக ஆயிரம் சண்டைப் பயிற்சிக் கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட சண்டைக்காட்சி படமாகிறது.

 பல ஆண்டுகளுக்கு முன் வெளியான '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க செல்வராகவன் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 'விமானம்' என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.