'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக திரிஷா மிகக் குறைவான சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
தற்போது இளம் நாயகிகள் ஒரு வெற்றிப் படத்தில் நடித்தாலே இரண்டு கோடி சம்பளம் கேட்பதாகத் தெரிகிறது. முன்னணி கதாநாயகிகள் ஐந்து கோடி ரூபாய் சம்பளம் கேட்கின்றனர். இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரு பாகங்களுக்குமாகச் சேர்த்து திரிஷா ரூ.5.5 கோடி மட்டுமே சம்பளமாகப் பெற்றுள்ளாராம்.
மணிரத்னம் மீதுள்ள மதிப்பின் காரணமாக அவர் ஊதிய விஷயத்தில் கறார் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
மலையாளப் படத்தில் முத்தக் காட்சியில் நடித்திருப்பது குறித்து நடிகை அமலா பால் விளக்கம் அளித்துள்ளார்.
கதைக்குத் தேவைப்பட்டால் இதுபோன்ற காட்சிகளில் நடிக்க தயங்கக்கூடாது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
"இதற்கு முன்பு 'ஆடை' என்ற படத்தில் அரை நிர்வாணமாக நடிக்க வேண்டியிருந்தது. கதைக்குத் தேவை என்பதால் அதற்கு ஒப்புக்கொண்டேன்.
"நிர்வாணமாக நடிக்க ஒப்புக்கொண்ட எனக்கு, முத்தக்காட்சியில் நடிப்பது பெரிய விஷயமல்ல," என்று கூறியுள்ளார் அமலா பால்.
பிருத்விராஜுடன் 'ஆடு ஜீவிதம்' என்ற படத்தில் அவர் இணைந்து நடித்துள்ளார். அந்தப் படத்தில்தான் முத்தக்காட்சி இடம்பெற்றுள்ளது.
இரட்டை வேடங்களில் நடிக்க விரும்புவதாக கூறுகிறார் ஷ்ருதி ஹாசன்.
அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கிடைத்தால் சம்பளம், கால்ஷீட் குறித்தெல்லாம் யோசிக்காமல் நடிக்க தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"36 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் என் தந்தை கமல்ஹாசன் நடிக்கிறார். இதை ரசிகர்களைப் போல் நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
"என் தந்தை நடித்த படங்கள் எனக்குப் பிடிக்கும் என்றாலும், 'நாயகன்' படத்துக்கு என் மனதில் தனி இடம் உண்டு. அப்பாவுடன் இதுவரை நான் இணைந்து நடித்ததில்லை. அதற்கான வாய்ப்பு விரைவில் அமையும் என்று நம்புகிறேன்," என்கிறார் ஷ்ருதி ஹாசன்.
மூத்த நடிகர் சரத் பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், உடல் உறுப்பு நோய் அழற்சி பிரச்சினை காரணமாக ஹைதரா பாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.
'சூரரைப் போற்று' இயக்குநர் சுதா கொங்கராவும் நடிகர் ரஜினியும் பெங்களூரில் உள்ள ஆசிரமம் ஒன்றில் சந்தித்துப் பேசியுள்ளனர். சுதா கூறிய இரண்டு கதைகளை ரஜினி செவிமடுத்ததாகக் கூறப்படுகிறது.

