முப்பது வயதைக் கடந்துவிட்ட நடிகர்கள் பள்ளி மாணவனாக நடிப்பது எப்போதுமே சவாலான ஒன்று. நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன் தனுஷைத் தொடர்ந்து அசோக் செல்வனும் அதுபோல் நடித்திருக்கிறார். பள்ளி மாணவனாகவும் கல்லூரி மாணவனாகவும் 'சபா நாயகன்' என்ற படத்தில், பள்ளியில் தொடங்கி கல்லூரியில் முடியும் காதல் கதையில் நடித்து வருகிறார்.
தனுஷ் தற்பொழுது நடித்து வரும் படம் 'கேப்டன் மில்லர்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் படப்பிடிப்பில் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. அதனால் பயங்கர சத்தத்துடன் அவை வெடித்ததுடன் கரும்புகை எங்கும் சூழ்ந்தது. அதனால் அங்கு வந்த ஆட்சியர், "உரிய ஆவணங்கள் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தியது தவறு," என்று கூறி படப்பிடிப்பை நிறுத்தி வைத்தார். நேற்று உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கி உள்ளனர் படக்குழுவினர்.
சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் 'மாவீரன்'. இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' படமும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஒரு நாளைக்கு முன்பு 'ஜெயிலர்' படம் வெளியாவதால் அந்தப் படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் 'மாவீரன்' படத்திற்குத் திரையரங்குகளின் எண்ணிக்கை குறையும் என்பதால் சிவகார்த்திகேயனும் படக் குழுவினரும் கவலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் படங்கள் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து 'டாக்டர்', 'டான்' படங்கள் அவருக்கு வெற்றிகளைக் கொடுக்கத் தொடங்கின. 'மாவீரன்' படமும் வெற்றிப்பட வரிசையில் வரும் என்று காத்திருக்கையில் 'ஜெயிலர்' படத்தின் மோதலால் வசூல் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
'பொன்னியின் செல்வன் 2' படத்தின் விளம்பரத்திற்காக நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது இயக்குநர் மணிரத்னத்திடம், "ஐஸ்வர்யா ராய் உங்களுக்கு அதிர்ஷ்டமான நடிகையா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குநர், "என் கதைக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்தால் அவரைத் தொடர்புகொள்வேன். அவரும் நடிக்க ஒப்புதல் கொடுப்பார்," என்று சொன்னார். தூரத்தில் உட்கார்ந்து இருந்த ஐஸ்வர்யா ராய் உடனே எழுந்து வந்து மணிரத்னத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று கட்டி அணைத்துக் கொண்டது பலரையும் வியக்க வைத்தது.
வரலாற்றுப் படங்கள் அதிக பொருள் செலவிலும் முன்னணி நடிகர்களையும் வைத்து எடுத்தால் வெற்றி பெறும் என்பதைப் பொய்யாக்கும் வகையில் ரூ.10 கோடியில் அறிமுக நடிகர்களை வைத்து தயாரான 'யாத்திசை' படம் நான்கு நாளில் ரூ.2 கோடி வசூல் செய்திருப்பதாகக் கூறுகின்றனர் படக்குழுவினர்.

