மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக 'சோழர்களின் பயணம்' என்ற தலைப்பில் படத்திற்கான விளம்பரப் பயணத்தைப் படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விளம்பர நிகழ்ச்சிகளில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக திரிஷா, பூங்குழலியாக ஐஸ்வர்ய லட்சுமி, அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, மற்றும் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷோபிதா துளி பாலா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடந்த பத்து நாள்களாக திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஷோபிதா ஆகியோர் விதவிதமான வடிவமைப்பு, வண்ணங்களில் அணிந்த ஆடைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.
குறிப்பாக இத்தனை வயதிலும் திரிஷா இவ்வளவு அழகாக இருக்கிறாரே என ரசித்து பலரும் பதிவுகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
திரிஷாவுக்கு இணையாக ஷோபிதா, ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோரும் ரசிகர்களைக் கவர்ந்தனர்.
ஐஸ்வர்யா ராய் ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் மட்டும் கலந்துகொண்டார்.
பத்திரிகையாளர் சந்திப்புகள், தொலைக்காட்சி, யுடியூப் ஒளிவலை ஆகியவற்றில் பேட்டிகள் தருவதற்காக இந்த நடிகைகளுடன் அவர்களது ஆடை, அலங்கார, ஒப்பனைக் குழுவினரும் தனி விமானத்தில் பயணம் செய்து நடிகையர்களை அழகாகக் காட்ட ஒத்துழைத்துள்ளார்கள்.
அதேபோல் முதல் பாகத்தைவிட, இரண்டாம் பாகத்தின் கதை மிகவும் விறுவிறுப்பான கதையைக் கொண்டது என்பதால் இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் எப்படிக் கொண்டு சென்றிருப்பார் எனப் பலர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் வெளியானபோது கதைக்களத்தில் சில நிறைகுறைகளை ரசிகர்கள் கூறி இருந்தாலும் இந்தப் படத்தை எடுத்த விதம் பலரின் பாராட்டுகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இந்தப் படத்திற்கான முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.