உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் சக்கைப்போடு போடுகிறது 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம். குறிப்பாக ஜப்பானில் பெரும் வசூல் கண்டு வருகிறது. அங்கு இப்படம் வெளியாகி 25 வாரங்கள் கடந்துவிட்டன. 186வது நாளாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் இந்தியாவிலேயே இத்தனை வாரங்கள் திரையரங்குகளில் ஓடவில்லை என்றும் படக்குழுவினர் வியப்புடன் கூறுகின்றனர். இதுவரை ரஜினிகாந்த் நடித்த 'முத்து' திரைப்படம்தான் ஜப்பானில் அதிக வசூலைக் குவித்த இந்தியப் படமாக இருந்தது. அந்தச் சாதனையை 'ஆர்ஆர்ஆர்' முறியடித்துள்ளது.
'கட்டா குஸ்தி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார் அதன் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி. அண்மைய பேட்டி ஒன்றில், இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர்தான் முடிவு செய்யவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். "கணவன், மனைவி இடையே எழக்கூடிய தேவையற்ற கருத்து வேறுபாடுகள் குறித்து அலசும் நல்ல படைப்பாக 'கட்டா குஸ்தி' உருவானது. யதார்த்தமான காட்சி அமைப்புகளால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது. இதன் இரண்டாம் பாகம் உருவானால் எப்போது வேண்டுமானாலும் கால்ஷீட் ஒதுக்கி நடிக்கத் தயார்," என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

