பொதுவாக புதுப்பட வாய்ப்புகளைப் பெறுவதில்தான் கதாநாயகிகள் மத்தியில் போட்டி நிலவும் எனக் கேள்விப்பட்டுள்ளோம். இப்போது விளம்பரங்களில் நடிப்பதற்கும் கடும் போட்டி நிலவுவது தெரிய வந்துள்ளது.
மூத்த நாயகிகள் தொடங்கி, நேற்று அறிமுகமான இளம் நடிகைகள் வரை பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடி அலைவதாகக் கூறப்படுகிறது.
ஒரு திரைப்படத்துக்காக நூறு நாள்கள் கால்ஷீட் ஒதுக்கி நடிக்கும் நாயகிகளுக்கு ஒன்றிரண்டு கோடிகள் ஊதியமாக வழங்கப்படுகிறது. முன்னணி நாயகிகள் என்றால் இரட்டிப்பு சம்பளம் கிடைக்கும், அவ்வளவுதான்.
ஆனால் விளம்பரப் படங்களில் நடிப்பதற்கு அதிகபட்சம் ஒரு வாரம் கால்ஷீட் ஒதுக்கினால் போதும். முன்னணி நாயகிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாயில் இருந்து மூன்று கோடி வரை சம்பளம் கிடைத்துவிடுகிறது.
நீண்ட வசனங்கள் பேசி, மரத்தைச் சுற்றி காதல் பாடல் பாடி, உணர்வுபூர்வமான காட்சிகளில் கண்ணீர் சிந்தி என்று எந்த வகையிலும் மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லை.
"விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் உடலை வருத்திக்கொள்ளாமல், நேரத்தை வீணடிக்காமல் சம்பாதிக்க முடிகிறது. வெற்றிபெறும் படங்கள் மூலம், கிராமப்புற மக்களைக்கூட சென்றடைய முடியும். அதன் மூலம் புகழ் அதிகரிக்கும் என்பது உண்மைதான்.
"எனினும், விளம்பரங்கள் என்பவை கடைக்கோடி ரசிகனின் வீட்டுக்குள் நம்மை நாள்தோறும் அழைத்துச் செல்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இடைவேளைகளில் ஏராளமான விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. அவற்றைப் பார்க்கும் குழந்தைகள்கூட விளம்பரங்களில் இடம்பெறும் நடிகர், நடிகைகளின் ரசிகர்களாக மாறிவிடுகிறார்கள்.
"அது மட்டுமல்ல, சில முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்கள் நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகின்றன. அதனால் மிக எளிதில் பிற மொழி ரசிகர்களைச் சென்றடைய முடிகிறது.
"பெரிய நிறுவனங்கள் தொடர்பான, சந்தையில் புதிதாக அறிமுகமாகும் பொருள்கள் தொடர்பான விளம்பரங்களில் நடிப்பவர்களுக்கும் ஒருவகையில் விளம்பரம் கிடைக்கிறது என்பதே உண்மை. மேலும், லட்சக்கணக்கில் சம்பளம் கிடைப்பது கூடுதல் லாபம். அதனால்தான் நடிகைகள் மத்தியில் விளம்பரங்களில் நடிக்க கடும் போட்டி நிலவுகிறது," என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.
தென்னிந்திய கதாநாயகிகளைப் பொறுத்தவரையில் நயன்தாராதான் விளம்பர உலகில் முன்னணியில் உள்ளார். அதற்கு அடுத்தபடியாக திரிஷா உள்ளிட்ட நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
"சினிமா நட்சத்திரங்கள் நடிக்கும் பெரும்பாலான விளம்பரப் படங்கள், எளிய மக்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கானவை. எனவே அப்பொருள்களின் விற்பனையை அதிகரிக்க உதவுவதோடு, மக்கள் மனதிலும் இடம்பிடித்து தங்களுக்கான சந்தை மதிப்பையும் அவர்களால் தக்கவைத்துக்கொள்ள முடிகிறது.
"பொதுமக்களைத் தங்க நகைகளை வாங்கச் சொல்லும் விளம்பரங்களில் நயன்தாரா, திரிஷா, தமன்னா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் அடிக்கடி தோன்றுகிறார்கள். இதேபோல் மூத்த நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், சுகன்யா போன்றவர்களும் இத்தகைய விளம்பரங்களில் முகம் காட்டுகிறார்கள்.
"வீடு, மனை தொடர்பான விளம்பரங்களில் சுஹாசினி, குஷ்பு போன்றவர்களைப் பார்க்க முடிகிறது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, பற்பசை ஆகியவற்றுக்கான விளம்பரங்களில் சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்டோரைக் காண முடியும்," என்கிறார்கள் விளம்பர உலகிலும் திரைத்துறையிலும் ஒருசேர பணியாற்றும் நிபுணர்கள்.
இன்றைய தேதியில் நயன்தாராவுக்கு இணையாக ராஷ்மிகா மந்தனாவுக்கும் விளம்பர உலகில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அண்மைய சில மாதங்களில் மட்டும் அவர் ஆறு விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.
இதற்காக அவர் ஒருமாதம் கால்ஷீட் ஒதுக்கி இருந்தால் அதுவே அதிகம். ஆனால் இந்த விளம்பரங்கள் மூலம், மூன்று புதுப் படங்களில் நடிப்பதற்கு ஈடான தொகையை அவர் ஊதியமாகப் பெற்றுள்ளாராம்.
கதாநாயகர்களைப் பொறுத்தவரையில் விளம்பரங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அஜித், விஜய் உள்ளிட்டநாயகர்கள் ரூ.100 கோடி ஊதியம் பெறுவதால் அவர்கள் விளம்பர உலகைக் கண்டுகொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.
, :
தமிழகத்

