'அருவி' படத்திற்குப் பிறகு தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகும் 'கருமேகங்கள் கலைகின்றன' படத்தில் நாயகியாக நடித்துள்ளார் அதிதி பாலன். பாரதிராஜா, யோகி பாபு, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
"இந்தப் படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். பல கஷ்டங்களை அனுபவித்த ஒரு பெண்ணுக்கு திடீரென ஒரு மிகப்பெரிய பொறுப்பு கிடைக்கும்போது அவள் என்ன செய்கிறாள் என்பதே இப்படத்தின் கதை. ஒரு பெண்ணுக்கும் ஒரு குழந்தைக்கும் இடையேயான உறவைச் சித்திரிக்கும் கதை என்றும் சொல்லலாம்.
"தங்கர்பச்சானின் வழக்கமான குடும்பம், மனிதர்களின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதை இது. திரையுலகில் பழுத்த அனுபவம் உள்ளவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதை நல்லவிதமாகப் பயன்படுத்திக்கொண்டேன். குறிப்பாக, இயக்குநர் பாரதிராஜா சில நுணுக்கங்களை எனக்கு அழகாக சொல்லிக்கொடுத்தார்.
"நான் அடிப்படையில் வழக்கறிஞர். ஆனால் நடிக்க வந்த பிறகு அத்தொழிலில் நீடிக்க முடியவில்லை. இப்போதைக்கு நடிப்புதான் எனது முதல் இலக்கு என்றாலும் வழக்கறிஞர் பணியைக் கைவிட மாட்டேன்.
"தொடர்ந்து ஒரே மாதிரியான பாத்திரங்கள் அமைந்தன. அனைத்துவிதமான பாத்திரங்களிலும் நடிக்க விரும்பியதால் பல வாய்ப்புகளை ஏற்கவில்லை," என்கிறார் அதிதி.

