ஓடிடி தளங்களின் வருகையால் தமிழ்த் திரையுலகில் நாள்தோறும் புதுப்புது கதாநாயகிகள், கலைஞர்கள் அறிமுகமான வண்ணம் உள்ளனர். அந்தப் புதுமுகங்களின் வரிசையில் அண்மையில் இணைந்துள்ளார் ஷாலி நிவேகாஸ்.
சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளராக ரசிகர்களுக்கு அறிமுகமான ஷாலி, 'மிஸ் சென்னை' அழகிப் பட்டம் வென்றவர். அண்மையில் இவர் நடித்த 'செங்களம்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சூட்டோடு சூடாக தேடி வந்த சில வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் இந்த வரவேற்பையும் வெற்றியையும் தன்னால் மனதாரக் கொண்டாட முடியவில்லை என சோகத்துடன் சொல்கிறார் ஷாலி.
காரணம், இவரது நெருக்கமான தோழி எதிர்பாராதவிதமாக மரணமடைந்துவிட்டாராம். அடுத்து ஷாலியின் உடன்பிறந்த சகோதரி விபத்தில் சிக்கினார். இப்படி அடுத்தடுத்து நிகழ்ந்த சில சம்பவங்கள் முடக்கிப் போட்ட நிலையில், அதிலிருந்து மெல்ல மீண்டு வருவதாகச் சொல்கிறார்.
"திரையுலகில் பணியாற்ற வேண்டும் என்பது சிறு வயது முதலே என் மனதில் ஆழமாகப் பதிவிட்ட ஆசை. நடிப்பில் சாதிக்க வேண்டும் என விரும்பினேன். அடிப்படையில் நான் ஒரு பரதக் கலைஞர். முறைப்படி நடனம் கற்றுக்கொண்டேன்.
"ஒரு நாட்டிய நாடகத்தை அரங்கேற்றி முடித்ததும், நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு பாட்டியும் பேத்தியும் நடனத்தை வெகுவாகப் பாராட்டினர். அப்போதுதான் நடிப்பு என்பது பிறருடைய மனதில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது புரிந்தது. ஒருவகையில் வியப்பாகவும் இருந்தது. அன்று கிடைத்த அந்தப் பாராட்டுக்குப் பிறகு எனது நடிப்பாசை பல மடங்கு கூடியது," என்கிறார் ஷாலி. எனினும் ஆசைப்பட்டதுபோல் நடிகையாவது அவ்வளவு எளிதாக இல்லையாம். காரணம், ஷாலியின் இந்த ஆசைக்கு அவரது வீட்டில் யாருடைய ஆதரவும் கிடைக்கவில்லை.
"திரையுலகுக்கும் எனது குடும்பத்துக்கும் வெகு தூரம். மிகுந்த கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்டேன். எனினும் முகத்தில் அடித்தாற்போல் நடந்துகொள்ளாமல் ஒரு நிபந்தனை விதித்தனர்.
"'உன் பெயருக்குப் பின்னால் குறிப்பிடுவது போல் ஒரு பட்டப்படிப்பை முடித்துவிடு. அதன் பிறகு ஒரு வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பளம் வாங்கிய பிறகும் நடிகையாகும் ஆசை இருந்தால், தாராளமாக நடிக்கலாம்' என்றனர்.
"இது போதாதா, பெற்றோர் ஆசைப்படி பொறியியல் படிப்பை முடித்தேன். பிறகு பெங்களூரில் மூன்று லட்சம் ரூபாய் ஊதியத்துடன் ஒரு வேலை அமைந்தது. இதைச் சாதித்த பிறகு வீட்டில் எந்தவித தடையும் இல்லை. முந்திய நிலைக்கு நேர்மாறாக என் பெற்றோரே நான் நடிகையாக முழு ஆதரவை வழங்கினர். இப்படி காத்திருந்து சாதித்தேன்," என்று ஆஸ்கார் விருது பெற்றதற்கு இணையாக உற்சாகத்துடன் விவரிக்கிறார் ஷாலி.
இவர் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய 'வணக்கம் தமிழா' என்ற நிகழ்ச்சிக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக 'செங்களம்' பட வாய்ப்பு கிடைக்க, தயக்கமின்றி ஏற்றுக் கொண்டாராம்.
நடிப்புத் தேர்வின்போது 'அரசியலில் பழம் நழுவி விழும் எனக் காத்துக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது' என்ற வசனத்தைப் பேசுமாறு இயக்குநர் பிரபாகரன் கூறியுள்ளார். அந்த வசனம்தான் கதையை நகர்த்திச் செல்லும் அளவுக்கு முக்கியமானது என்பதைப் புரிந்துகொண்டதாகவும் தாம் அதைப் பேசி நடித்தது இயக்குநருக்குப் பிடித்துப்போனதாகவும் சொல்கிறார்.
"'செங்களம்' படத்தைப் பார்த்துவிட்டு பலரும் பாராட்டினர். நீண்ட வசனங்களைக் கூட சர்வ சாதாரணமாகப் பேசியிருக்கி றீர்கள் என்று கூறினர். இந்தப் பாராட்டுகள் எல்லாம் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் சாருக்குத்தான் போய்ச் சேரும். அவர்தான் நான் எப்படி கதாபாத்திரத்தை உள்வாங்கிப் பேச வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்தார்," என்று சொல்லும் ஷாலி, அடுத்து இளையராஜா இசையில் உருவாகும் 'பேரன்பும் பெருங்கோபமும்' படத்தில் நடிக்கிறார். இது பாலு மகேந்திராவின் மாணவர் சிவப்பிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் படம். "தமிழகத்தில் நிகழும் ஆணவக் கொலைகளைக் கண்டிக்கும் கதைக் கருவுடன் உருவாகிறது. இதிலும் கதையை நகர்த்திச் செல்லும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஆனந்த் அண்ணா மலை இயக்கும் 'காகங்கள்' படத்திலும் முக்கிய கதாபாத்தி ரத்தை ஏற்றுள்ளேன்.
"என் நடிப்புத் திறமைக்கு சவால் விடக்கூடிய எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் தயக்கமின்றி நடிப்பேன். சுருக்கமாச் சொல்வதாக இருந்தால் 'பெண் விஜய் சேதுபதி' என்று பெயரெடுக்க ஆசை," என்கிறார் ஷாலி.
, :
தமிழகத்

