இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்கிறார் சம்யுக்தா மேனன்.
முன்னணி கதாநாயகர்களிடம் இதை ஒரு கோரிக்கையாக தாம் முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்யுக்தா நாயகியாக நடித்துள்ள 'விரூபாக்ஷா' தெலுங்குப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கான நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது, திரையுலகில் கதாநாயகிகளுக்கு எந்த வகையிலும் முக்கியத்துவம் அளிக்கப்படாதது தமக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"ஒரு படத்தில் நாயகனுக்கு முக்கியத்துவம் உள்ளதா என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அதுபோல் கதாநாயகிகளின் நிலையும் உயர வேண்டும். நாயகிகளுக்கு நூறு விழுக்காடு முக்கியத்துவம் இல்லை என்றாலும் சரிபாதி அளவுக்கேனும் நாயகிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
"அனைத்து மொழிகளிலும் திறமையான நடிகைகள் உள்ளனர். இதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்," என்கிறார் சம்யுக்தா.

