மலையாளத் திரையுலகில் உடையலங்கார நிபுணராக முத்திரை பதித்த அக்ஷயா பிரேம்நாத் நடிகையாக மாறி உள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான 'ஒன்' படத்தின் மூலம் உடையலங்கார கலைஞராக அறிமுகமாகி, பிறகு பத்துக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவர், 'மை டியர் டயானா' இணையத்தொடரில் நாயகியாக அறிமுகமாகிறார். இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன் தான் கதாநாயகனாம்.
"விதவிதமான உடைகளை வாங்குவது, வடிவமைப்பது என்றிருந்த நான் இப்போது நடிகையாகிவிட்டேன். அதிலும் தமிழில் அறிமுகமாகிறேன் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது. "கல்லூரியில் படிக்கும்போதே 'ஓம் சாந்தி ஓஷனா' என்ற மலையாளப் படத்தில் நடித்திருக்கிறேன். பிறகுதான் உடையலங்கார நிபுணராகப் பணியாற்றத் தொடங்கினேன்.
"நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை நல்லவிதமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளேன்," என்கிறார் அக்ஷயா.
இவரது சொந்த ஊர் கொச்சின். அப்பா பிரேம்நாத் கைத்தறித் துணி விற்பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். பூர்வீகம் கன்னியாகுமரி.
"கொச்சின்தான் அம்மா பிறந்து வளர்ந்த இடம். அங்கே பள்ளி ஆசிரியையாக இருந்தவர். எனக்கு அண்ணன் இருக்கிறார்.
"பட்டப்படிப்பை முடித்துள்ளேன். சிறு வயதில் இருந்தே நடனத்தில் ஆர்வம் இருந்தது. பள்ளியில் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். அப்போதுதான் 'ஓம் சாந்தி ஓஷனா' படத்துக்கான நடிப்புத் தேர்வு நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின்னர் வாய்ப்பு கிடைத்தது. அதில் நிவின் பாலி, நஸ்ரியா, வினித் சீனிவாசன் எனப் பலரும் நடிச்சிருந்தாங்க. நான் நஸ்ரியா தோழியாக நீத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன்.
"எனினும் அந்தப் படத்தில் நடித்து முடித்ததும் படிப்பில் கவனம் செலுத்துமாறு அம்மா அறிவுறுத்தினார். அது எனக்கும் சரியாகப்பட்டது. இன்றுவரை என்னைச் சிறப்பாக வழிநடத்தி வருவது அம்மாதான். அதனால் அவர் சொன்னபடியே ஃபேஷன் தொழில்நுட்பம் தொடர்பாக பட்டமேற்படிப்பை முடித்தேன்.
"அப்போது என்னுடன் படித்த பலர் பெரிய நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். ஆனால், என்னுடைய விருப்பம் திரையுலகில் உடையலங்கார, ஆடை வடிவமைப்பாளராக வேண்டும் என்பதுதான். அந்த அளவுக்கு இத்துறையில் ஆர்வமாக இருந்தேன்.
தற்போது 'ஹேஷ்டாக் ஹோம்' 'பிரம்மம்' என வரிசையாகப் பல படங்களில் நடித்துள்ளாராம். வாய்ப்பு கிடைக்கும்போது ஆடை அலங்கார நிபுணராகவும் பணியாற்றுகிறாராம். தாம் வடிவமைத்த உடைகளின் விளம்பரத்தில் தாமே நடித்தும் உள்ளார்.
"மலையாள நடிகர் திரு.சுரேஷ்கோபி நடிப்பில் வரவுள்ள 'ஒற்றக்கொம்பன்' படத்தில் ஆடை அலங்கார நிபுணராகப் பணியாற்றினேன். 'மகாவீர் கர்ணா' படத்துக்காக விக்ரம் சாருக்கும் ஆடைகள் வடிவமைத்தேன். நான் வடிவமைத்த உடைகளுடன் காணப்படும் எனது புகைப்படங்களைப் பார்த்த பலரும் 'நீங்களே நடிக்கலாமே' என்று ஆலோசனை வழங்கினர். அதுதான் என்னை நடிக்கத் தூண்டியது.
"புதுப் படம் ஒன்றில் நடிகர் யோகி பாபுவுக்கான உடைகளையும் நான்தான் வடிவமைத்தேன். நடிப்பும் உடையலங்காரமும் எனக்குப் பலவகையிலும் பெயரையும் புகழையும் பெற்றுத் தருகின்றன. மொத்தத்தில் சொல்வதானால் வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்துள்ளது.
"நல்ல நடிகை என்று பெயரெடுத்தால் போதும். வேறு பெரிய ஆசைகள் ஏதும் எனக்கு இல்லை. திரைத்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது. அந்த மனநிறைவுடன் இருப்பதால் இத்துறையில் எனக்கென இலக்குகளை வகுத்துக் கொள்ளவில்லை. எனினும் எதிர்காலம் சில கணக்குகளைப் போட்டு வைத்திருக்கக்கூடும். எனவே எல்லாம் மாறக்கூடும்," என்கிறார் அக்ஷயா.

