தனது பெயரின் பின்னால் தான் சார்ந்துள்ள சாதியின் பெயரைச் சேர்த்துக்கொள்வதில் தமக்கு விருப்பம் இல்லை என்கிறார் சம்யுக்தா மேனன். இதை வெளிப்படையாக தெரிவித்த பிறகும், சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது தன்னை சம்யுக்தா மேனன் என சாதிப்பெயரோடு சிலர் குறிப்பிடுவதாகச் சொல்கிறார். "நான் மேனன் என்ற சாதிப் பெயரை நீக்கியதால் எந்த மாற்றமும் நடந்துவிடவில்லை. எந்தச் சாதியாக இருந்தாலும் நாம் செய்யும் பணியில், அதற்கான உழைப்பை வழங்குவதில் உண்மையாக இருக்க வேண்டும். இப்போதும்கூட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போதும் என்னை சம்யுக்தா மேனன் என்று தான் பலரும் அழைக்கின்றனர். இது வருத்தம் அளிக்கிறது," என்கிறார் சம்யுக்தா.
மலையாள நடிகை மிர்னா மேனனுக்கு திடீ ரென தமிழில் வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம்.
கடந்த 2016ஆம் ஆண்டிலேயே 'பட்டதாரி' என்ற தமிழ்ப் படத்தில் நாயகியாக அறிமுகமான இவர், பிறகு சில சர்ச்சைகளில் சிக்கினார்.
அண்மையில் 'புர்கா' என்ற படத்தின் கதாநாயகியாக நடித்த மிர்னா மேனனுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. தெலுங்கில் அவர் அல்லரி நரேஷுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்துள்ள உக்ரம் என்கிற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. "இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. நான் நடிக்க வேண்டிய காட்சிகளுக்காக நாற்பது நாள்கள் படப்பிடிப்பில் பங்கேற்றேன். இந்தப் படம் வெளியான பின்னர் தமிழ் சினிமாவில் தனக்கான அங்கீகாரம் நிச்சயம் தேடி வரும்," என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் மிர்னா.
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை திரைப்படமாகிறது. அவரது கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடக்கத்தில் தயாரிப்புத் தரப்பு நடிகர் சூர்யாவைத் தான் அணுகியதாக தகவல் வெளியானது. ஆனால் இத்தகவலை சூர்யா திட்டவட்டமாக மறுத்தி ருந்தார். இதையடுத்து ஜீவாவை அணுகியபோது அவர் உடனடியாக சம்மதித்தாராம். இதையடுத்து படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் முதல் தோற்றச்சுவரொட்டியும் அச்சமயம் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பிரியங்கா சோப்ரா, விலை உயர்ந்த நெக்லஸ் அணிந்திருந்தார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களைப் பெரிதும் கவர்ந்த அந்த நெக்லஸ் சுமார் 204 கோடி ரூபாய் மதிப்புள்ளது என்று கூறப்படுகிறது. அது 'ப்ளு லகூன்' நெக்லஸ் வகையைச் சேர்ந்தது என்றும் விரைவில் ஏலம் விடப்பட இருப்பதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அந்த நெக்லசை தாம் அணிந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா.

