நடிக்க வந்த புதிதில் நடனத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததாகவும் தற்போது நடிப்பில் கவனம் செலுத்துவதாகவும் சொல்கிறார் டிம்பிள் ஹயாதி.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்துள்ள இந்த இளம் நாயகி, இந்தியில் தாம் ஓரங்கட்டப்பட்டதாகச் சொல்கிறார்.
கடந்த 2021ஆம் ஆண்டு 'அட்ராங்கி ரே' இந்திப் படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்திருந்தார் டிம்பிள். ஆனால் அவர் நடித்த பல காட்சிகளை நீக்கிவிட்டனராம்.
"அந்தப் படத்தின் நாயகிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர். அந்தக் கசப்பான அனுபவத்தை எந்நாளும் மறக்க இயலாது. எனினும் தனுஷ் சார் என் நிலைமையைப் புரிந்துகொண்டார்.
"நான் தனித்துவிடப் பட்டதாக உணர்ந்தபோது அவர்தான் துணையாக இருந்தார். படப்பிடிப்பின்போது நடிப்பு தொடர்பான நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார். நமக்கு யாருடைய ஆதரவும் இல்லை என்ற நினைப்பே வரக்கூடாது என்று அவர் அறிவுறுத்தியதையும் மறக்கவே இயலாது.
"அந்தப் படத்தில் நடித்தபோது எனக்கு 22 வயது. திரையுலகம் குறித்து அதிகம் தெரியாது. அதனால் எதற்கெடுத்தாலும் தயங்குவேன், பிறரிடம் பேச பயப்படுவேன். இப்போது நிலைமை வெகுவாக மாறிவிட்டது. புதுமுகங்களுக்கும்கூட உரிய மரியாதை கிடைக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மொழிகளைச் சார்ந்த ரசிகர்களை மகிழ்விப்பதற்கு ஏற்ப திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அவை ஒரே சமயத்தில் நாடு முழுவதும் வெளியீடு காண்கின்றன. இந்த மாற்றத்தைப் பார்க்கும்போது நம்ப முடியவில்லை. ஆனால் அனைத்தும் வேகமாக மாறி வருகிறது என்பதே உண்மை," என உற்சாகம் பொங்க பேசுகிறார் டிம்பிள்.
இவரது தாயார் ஆந்திராவைச் சேர்ந்தவர் எனில் தந்தை ஒரு தமிழர். அதனால் சிறு வயதில் தெலுங்கு பேசி வளர்ந்துள்ளார். எனினும் தமிழ், இந்தி என மற்ற மொழிகளில் நடிப்பது தமக்குச் சிரமமாக இல்லை என்கிறார்.
"நான் திரையுலகில் அறிமுகமானபோது 19 வயது. அதன் பிறகு கொரோனா பாதிப்பால் திரையுலகம் முடங்கிப்போனதை அடுத்து நிறைய படங்களில் நடிக்க இயலாமல் போனது. இப்போது என்னவெல்லாம் செய்தால் திரையுலகில் நீடிக்க முடியும் என்பதில் ஓரளவு தெளிவடைந்துள்ளேன். அதனால் என்ன மாதிரியான படங்களில், கதைக்களங்களில் நடிக்கிறேன் என்பதைவிட, எனக்கான கதாபாத்திரங்களின் தன்மை குறித்து அதிகம் யோசிக்கிறேன்.
"திரையுலகில் நான் வெகுதூரம் கடந்து செல்ல வேண்டியுள்ளது என்பது தெரியும். எனவே இன்று நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள், எனது திரைப்பயணத்துக்கான எரிபொருள் என்பதை உணர்ந்துள்ளேன்.
"எனது நடனத்தை அனைவரும் பாராட்டுகின்றனர். நடனம் எனது முக்கியமான தகுதியாக உள்ளது. தொடக்கத்தில் நன்றாக நடனமாடினால் ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்துவிடலாம் என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டேன். சிறந்த நடிப்புதான் ரசிகர்களைக் கைத்தட்ட வைக்கும் என்பதையும் அதுவே கலைஞர்களுக்கான முதல் விருது என்பதையும் புரிந்துகொண்டுள்ளேன்," என்று பக்குவமாகப் பேசுகிறார் டிம்பிள்.
தற்போது தெலுங்கில் கோபிசந்த் ஜோடியாக நடித்து வருபவர், தன்னுடன் இணைந்து நடிக்கும் குஷ்புவுடன் நெருக்கமாகிவிட்டாராம். குஷ்புவுடனும் அவரது மகளுடனும் இணைந்து சில சுற்றுலாக்களை மேற்கொண்டதாகவும் சொல்கிறார்.
"குஷ்புவின் மகள்தான் எனக்கு இப்போது மிக நெருக்கமான தோழி. அவர் நல்ல ஆலோசனைகளை வழங்கக்கூடியவர். மூத்த நடிகை என்ற வகையில் குஷ்புவும் என் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளார்.
"திரையுலகில் கவர்ச்சிப் பதுமை என்று பெயர் எடுப்பது எளிது. நல்ல நடிகை என்று பெயர் வாங்குவதுதான் முக்கியம். இதை உணர்ந்திருப்பதால் எனது வளர்ச்சி சீராக இருக்கும் என நம்புகிறேன்," என்கிறார் டிம்பிள் ஹயாதி.
, : தமிழகத்