ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் புதுப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. இப்படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.
இதில் சிகையலங்கார நிபுணராக நடித்துள்ளார் பாலாஜி. இதற்காக அவர் சுமார் ஒன்றரை மாதம் சிகையலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றாராம். தனது நடிப்பில் யாரும் குறை கண்டுவிடக்கூடாது என்பதற் காகத்தான் இந்தப் பயிற்சியாம்.
இந்நி்லையில், இப்படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கௌரவ வேடத்தில் நடித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜுடன் ஆர்.ஜே.பாலாஜி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார் பாலாஜி. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இசையமைப்பாளர் தமன் அண்மையில் கிரிக்கெட் வீரர் டோனியைச் சந்தித்துள்ளார். அப்போது அவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி படத்தை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். "எனது கனவு நனவானது. எனது இதயம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது. உண்மையான ரசிகர்களில் ஒருவரான என்னை மகிழ்ச்சிப் படுத்தியதற்காக டோனிக்கு நன்றி," என்று தமன் கூறியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளாா். அந்தப் படத்துக்கு 'டெஸ்ட்' என்று தலைப்பு வைத்துள்ளனர். தமிழில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான 'விஞ்ஞானி' படத்தில் கடைசியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். அதன்பிறகு மலையாளத்தில் அவர் சில படங்களில் நடித்தாலும் ஒன்பது ஆண்டுகளாக தமிழ்ச் சினிமா பக்கம் தலைகாட்டவில்லை. தற்போது மீண்டும் 'டெஸ்ட்' படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்ய இருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.