தமக்கு லட்சிய கதாபாத்திரம் என்று சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை என்றாலும் வில்லி கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க விரும்பவில்லை என்கிறார் இளம் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி.
காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் என்றாலும் மிகவும் பிடிக்கும் என்றும் ஓய்வாக இருக்கும் போதெல்லாம் வீட்டில் உள்ள புடவைகளைக் கட்டிக்கொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதுதான் தமது பொழுதுபோக்கு என்றும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"நான் பிறந்தபோது என் அப்பா எனக்கு ஸ்ரீ லட்சுமி என்று பெயர் வைத்தார். அம்மா ஐஸ்வர்யா என்று பெயர் வைத்தார். கடைசியில் ஐஸ்வர்யா லட்சுமி ஆனேன்.
"ஏன் வில்லி கதாபாத்திரங்களில் நடிக்கப் பிடிக்காது என்று சிலர் கேட்கிறார்கள். அப்படியோர் எண்ணம் என் மனதில் பதிந்துவிட்டது.
"சிறு வயதில் இப்படிப்பட்ட சில எண்ணங்கள் தோன்றுவது இயல்பு. அவற்றை மாற்றிக் கொள்ள இயலாது.
"அபிஷேக் பச்சன், விஜய் ஆகிய இருவரும்தான் எனக்குப் பிடித்தமான நடிகர்கள். அவர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக்கொள்வேன்.
"சம்பளம், கால்ஷீட் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்," என்று சொல் லும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் அதிகமாம்.
யுவராஜ் சிங் தான் தமக்குப் பிடித்தமான கிரிக்கெட் வீரர் என்கிறார். ஓய்வு கிடைத்தால் ஐபிஎல் உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளைக் காண அவர் தவறுவதே இல்லை. அது மட்டுல்ல, யுவராஜ் சிங்கை சிறு வயது முதலே மானசீகமாகக் காதலித்து வந்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி.
"ஆறாம் வகுப்பில் தொடங்கி பன்னிரண்டாம் வகுப்பு வரை அவரை மனதிற்குள் காதலித்துக் கொண்டே இருந்தேன். அப்போது கிரிக்கெட் பார்க்க நிறைய நேரம் இருந்தது. இப்போது அதற்கு நேர்மாறாக நேரமே இல்லை," என்று சிரிக்கிறார்.
'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்த பிறகு திரையுலகில் தமது மதிப்பு உயர்ந்துள்ளது என்று குறிப்பிடுபவர், தமக்கு இத்தகைய வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை என்கிறார்.
"வாழ்க்கையில் நடக்கும் இதுபோன்ற திடீர் மாற்றங்கள் சில சமயங்களில் நமக்குச் சாதகமாக அமைந்துவிடும். அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது அவரவர் சாமர்த்தியம். என்னைப் பொறுத்தவரை அதிர்ஷ்டம் இருந்ததால் இப்படிப்பட்ட வாய்ப்புகள் அமைகின்றன. நான் இதுவரை நடித்துள்ள படங்களின் மூலம் பெற்றுள்ள அனுபவங்கள் எனது கடைசிப் படம் வரை உதவிகரமாக இருக்கும்," என்கிறார் ஐஸ்வர்்யா லட்சுமி.
தற்போது தமிழ், தெலுங்கு என எந்த மொழிப் படங்களாக இருந்தாலும் நடிக்கத் தயார் என்று முடிவெடுத்துள்ள இவர், மனதுக்குப் பிடித்தமான கதாபாத்திரங்கள் அமையும்போது மொழி என்பது ஒரு தடையாக இருக்க வாய்ப்பில்லை என்கிறார்.
ஐஸ்வர்யா லட்சுமி
, : தமிழகத்

