சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டது தொடர்பில் சர்ச்சை வெடித்துள் ளது. ஒரு தரப்பினர் சமந்தாவைப் புறக்கணிக்கும் வகையில் செயல்படுவதாக அவரது ரசிகர்கள் கூறியுள்ள னர். ஐம்பது கோடி ரூபாய் செலவில் உருவான 'சாகுந்தலம்' அண்மையில் திரையரங்குகளில் வெளியீடு கண்டது. எனினும் படத்தின் மொத்த வசூல் பத்து கோடி ரூபாயைக்கூடத் தாண்டவில்லை. இந்நிலையில், இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளனர். ஆனால் இது தொடர்பான விளம்பரங்களில் சமந்தாவின் பெயர் இடம்பெறவில்லை. வழக்கமாக ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பை வெளியிடுவர். பிறகு முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகும். ஆனால் 'சாகுந்தலம்' படத்துக்கு எந்தவித முன்னறிவிப்பும் இல்லை. மேலும், சமூக ஊடகங்களில் வெளியான சிறிய அறிவிப்பிலும்கூட சமந்தாவின் பெயரைக் காணவில்லை என ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை முன்னணி நிறுவனம் ரூ.20 கோடிக்கு வாங்கியுள்ளதாம்.
தாம் அடுத்து இயக்க உள்ள படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரையில் வெளியாகும் என இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துள்ள அவர், அடுத்த படத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டதாக அண்மையில் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டி ருந்தார். இதையடுத்து படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் இதர பணிகளுக்கான திட்டங்களை வகுத்து வருவதாகவும் பார்த்திபன் கூறியுள்ளார். வழக்கம்போல் வித்தியாசமான கதைக்களத்துடன் பார்த்திபன் மீண்டும் களமிறங்க உள்ளதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அடுத்து 'சித்தா' என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் நடிக்கிறார் சித்தார்த். எஸ்.யு.அருண் குமார் திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏற்கெனவே 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' ஆகிய படங்களை இயக்கி உள்ளார் அருண்குமார், 'சித்தா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்றும் விரைவில் இறுதிக்காட்சிகள் படமாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
"முதல் தோற்றச் சுவரொட்டியை கமல்ஹாசன் வெளியிட்டார். இது எங்களுக்குக் கிடைத்த எதிர்பாராத பரிசு. 'காதலில் சொதப்புவது எப்படி?', 'ஜில் ஜங் ஜக்' ஆகிய படங்களைத் தயாரித்த எடக்கி எண்டர்டெயின் மெண்ட் தயாரிக்கும் நான்காவது படம் இது. இப்படத்தை பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்கிறார் அருண்குமார்.

