நள்ளிரவில் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த நடிகை

2 mins read
e32a8196-668f-44cb-9116-46176c92ab38
'லிட்டில் மிஸ் ராவுத்தர்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. படம்: ஊடகம் -

'96', 'மாஸ்டர்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கௌரி கிஷன், கேரளாவில் நள்ளிரவு வேளையில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

தற்போது 'லிட்டில் மிஸ் ராவுத்தர்' என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார் கௌரி. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.

அண்மையில் அங்கு இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கௌரி கிஷனை தடுத்து நிறுத்தினர். 'லிட்டில் மிஸ் ராவுத்தர்' படத்தின் நாயகனும் கௌரியுடன் இருந்துள்ளார்.

இருவரும் அணிந்திருந்த முகக் கவசத்தை அகற்றுமாறு கூறிய காவலர்கள், இருசக்கர வாகனத்துக்கான ஆவணங்களைச் சரிபார்த்துள்ளனர். பின்னர் வண்டியின் பதிவு ஆவணம் குறித்து கேள்வி எழுப்ப, கௌரி ஆவேசம் அடைந்தார்.

"ஆவணங்கள் குறித்து எனக்கு ஏதும் தெரியாது. எனக்கு 23 வயதாகிறது. இரவு நேரத்தில் ஓர் ஆணுடன் வந்த ஒரே காரணத்தால்தானே இவ்வாறு நிறுத்தி வைத்து கேள்வி கேட்கிறீர்கள்?

"நான் சின்ன பெண் அல்ல. வேறு எந்த பெண்ணுக்கும் இதுபோன்ற அவலம் நிகழக்கூடாது. வேறு யாரிடமாவது இவ்வாறு கடுமையாகப் பேசுவீர்களா?" என்று காவல்துறையினரிடம் கௌரி சரமாரியாக கேள்வி எழுப்பியதை வாகனமோட்டி ஒருவர் காணொளியாகப் பதிவுசெய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே, இக்காணொளி குறித்த சர்ச்சையும் வெடித்துள்ளது.

'லிட்டில் மிஸ் ராவுத்தர்' படக்குழுவினரும் தங்களுடைய அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் இந்தக் காணொளியைப் பகிர்ந்துள்ளனர்.

எனவே, அப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன் திட்டமிட்டு இப்படியொரு சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனரா? என்று ரசிகர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அண்மைக்காலமாக புதுமை என்ற பெயரில் இதுபோன்ற விளம்பர உத்திகளைப் படக்குழுவினர் பின்பற்றி வருகின்றனர் என்பதால் ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.