ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தாலே சிக்கல் என்பார்கள். ஆனால், 'நினைவெல்லாம் நீயடா' என்ற படத்தில் மூன்று நாயகிகளை நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் ஆதிராஜன்.
முழுநீள காதல் கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் இடம்பெறும் சம்பவங்களுடன் படம் பார்க்கும் ரசிகர்கள் தங்களை எளிதில் பொருத்திக்கொள்ள முடியும் என்கிறது இயக்குநர் தரப்பு.
இதற்கு முன்பு 'சிலந்தி', 'ரணதந்தீரா' (கன்னடம்), 'அருவா சண்ட' என மூன்று படங்களை இயக்கியுள்ள இவர், செய்தி ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
"ஒவ்வொருவரிடமும் காதல் அனுபவங்கள் மனதில் தேங்கி இருக்கும். என்னைப் பொறுத்தவரை இந்த உலகத்தில் உள்ள பாதிப் பேருக்கு அறிந்தும் அறியாத வயதில்தான் காதல் உணர்வு ஏற்பட்டிருக்கும். பெரும்பாலும் அது பள்ளிக்கூடக் காதலாக இருக்கக்கூடும்.
"அதுபோன்ற ஒரு காதலைத்தான் இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறேன். நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே ஒரு மோதலில் ஆரம்பிக்கும் தொடர்பு காதலில் முடிவடையும். தன் மனதில் உள்ள காதலை நாயகன் தெரிவிக்கிறான்.
"ஆனால் நாயகியோ, தன் படிப்புக்காக வெளிநாடு செல்வதாகச் சொல்கிறார். காதலியின் பதிலுக்காகக் காத்திருக்கும் நாயகனின் காதல் வெற்றி அடைந்ததா என்பதை முக்கோணக் காதல் கதையாகச் சொல்லி உள்ளேன்," என்கிறார் இயக்குநர் ஆதிராஜன்.
இப்படத்தில் சின்னத்திரையில் பிரபலமாக உள்ள பிரஜன் நாயகனாக நடித்துள்ளார். இளம் நாயகன் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் சிலரை அணுகினாராம் ஆதிராஜன்.
ஆனால் கதை பிடித்திருந்தாலும் சில நடிகர்கள் நடிக்க முன்வரவில்லை. வேறு சிலரோ, புதிய தயாரிப்பு நிறுவனம், வளர்ந்து வரும் இயக்குநர் என்று காரணம் காட்டி நடிக்க மறுத்துள்ளனர்.
"நான் யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. 'பொன்னியின் செல்வன்' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஒரு நடிகரிடம் என் கதையைச் சொன்னேன். ஆனால் அவர் நடிக்கவில்லை.
"பிரஜன் அனைவருக்கும் நன்கு அறிமுகமான இளம் நாயகன். நான் கதையை விவரித்த உடனேயே நடிக்க சம்மதித்துவிட்டார்.
"கதைப்படி, இசையமைப்பாளராக நடிக்கிறார். இனி காதல் கதைகளுக்கு இவரை விட்டால் பொருத்தமான நடிகர் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிரமாதமாக நடித்துள்ளார் பிரஜன்," என்று சொல்லும் ஆதிராஜன், முக்கோணக் காதல் கதை என்பதால் மூன்று நாயகிகளை நடிக்க வைத்துள்ளதாகக் கூறுகிறார்.
சில நாயகிகள் கதை பிடித்திருந்தபோதிலும் பிரஜன்தான் நாயகன் என்றதும் நடிக்கத் தயங்கி உள்ளனர். முன்னணி நாயகிகளோ, கதை கேட்கக்கூடத் தயங்கினார்களாம்.
"நல்ல கதைதான் வெற்றி பெறும் என்பது சில கதாநாயகிகளுக்குப் புரியவில்லை. ஆனால், கதைதான் ஒரு படத்தின் கதாநாயகன் என்பதை மனிஷா யாதவ் நன்கு புரிந்து வைத்துள்ளார்.
"அவர் வெளியூரில் இருந்தபோது கைப்பேசி வழி கதைச்சுருக்கத்தை தெரிவித்தேன். அதைக் கேட்டதும் ஆர்வம் அதிகரிக்கவே, உடனடியாக சென்னைக்கு வந்து முழுக் கதையும் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். கதைப்படி, அத்தை பெண் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.
"மனிஷாவுக்கு இதற்கு முன்பு நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன. எனினும், மிகப்பெரிய வெற்றிப் படத்தில் அவரைக் காண முடியாததில் எனக்கும் வியப்பு கலந்த வருத்தம் உண்டு. அவர் இயக்குநர்களுக்கு ஏற்ற நடிகை என்பேன். நிச்சயம் அவர் வெற்றி நாயகியாக கோடம்பாக்கத்தில் வலம் வருவார் என நம்புகிறேன்," என்கிறார் இயக்குநர் ஆதிராஜன்.
புதுவையைச் சேர்ந்த சினாமிகா புதுமுகம் எனச் சொல்ல முடியாத அளவுக்கு அருமையாக நடித்துள்ளதாகக் குறப்பிடுபவர், 'கிளசரின்' இல்லாமலேயே சோகக் காட்சிகளில் கண்ணீர் விட்டு அழுது நடித்ததைக் கண்டு தாம் அசந்து போனதாகச் சொல்கிறார்.
ஸ்ரீபிரியங்கா முதன்முறையாக வில்லத்தனம் நிறைந்த நாயகியாக நடித்துள்ள படம் இது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களை மிரள வைக்குமாம். நாயகனின் நண்பராக ரெடின் கிங்ஸ்லி, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், மதுமிதா, பி.எல்.தேனப்பன், மனோபாலா, முத்துராமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
, :
தமிழகத்

