'கேன்ஸ்' திரைப்பட விழாவில் வேட்டி, சட்டையில் இந்திய அமைச்சர்
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வேட்டி சட்டையுடன் இந்தியாவின் இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்படத் திருவிழா பிரான்ஸ் நாட்டின் ரிவியராவில் தொடங்கி உள்ளது. இந்தத் திரைப்பட விழாவில் இந்திய அரசு சார்பில் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழு பங்கேற்று உள்ளது. அதேபோல் ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகைகள் நயன்தாரா, தமன்னா, பூஜா ஹெக்டே, வாணி திரிபாதி, நடிகர்கள் மாதவன், நவாசுத்தீன் சித்திக்கி உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.
'யாதும் ஊரே யாவரும் கேளீர்'
அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' விரைவில் வெளியீடு காணவுள்ளது. படத்தின் முன்னோட்டக்காட்சி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளளதோடு அரசியல் தலைவர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மகிழ் திருமேனி வில்லனாக நடிக்கும் இப்படத்தில் கரு பழனியப்பன், விவேக், மோகன் ராஜா, ரித்விகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

