மோனலிசா
'மனிதன்' என்ற சிங்கப்பூர் தமிழ் குறும்படம் அண்மையில் நடைபெற்ற அமெரிக்காவின் நியூயார்க் நகரின் ஒனிரோஸ் திரைப்பட விழாவில் (ONIROS Film Awards New York) இரு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.
இக்குறும்படத்தில் பணியாற்றிய மூன்று சிங்கப்பூர் இளையர்கள் 'சிறந்த நடிகர்', 'சிறந்த திரைக்கதை' என்ற இரு பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளனர்.
இவ்விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை இக்குறும்படத்தின் கதையை எழுதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்த திரு சரவணன் கெளதம், 26 பெற்றுள்ளார். இக்குறும்படத்தின் திரைக்கதையை நண்பர்களான மூவர் இணைந்து எழுதியுள்ளனர். இவ்விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதினை திரு சரவணன் உள்பட தற்சமயம் தேசிய சேவை புரிந்துவரும் திரு தமிழ், 23, இக்குறும்படத்தின் இயக்குநரான திரு முகமது ஜர்ஜிஸ் ஜஃபருல்லா ஆகியோரும் இணைந்து பெற்றுள்ளனர்.
அன்பையும் மனித மாண்பையும் நடைமுறைப்படுத்துவதே நல்வாழ்வின் அடித்தளம் என்ற கருப்பொருளையொட்டி இக்குறும்படம் அண்மையில் உருவாக்கப்பட்டது.
மூன்று மதங்களைச் சார்ந்த மூவர் வாழ்வில் ஓர் இரவில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தி நகரும் 15 நிமிட நீள இக்குறும்படத்தை 'தி சூசன் ஒன் ப்ரொடக்ஷன்' நிறுவனம் தயாரித்துள்ளது. இரு பிரிவுகளிலும் விருதுகளைப் பெற்றுள்ள திரு சரவணன் கடந்த ஒன்பது ஆண்டுகளாக திரைத்துறையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் இதுவரையில் 25 குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.
'தேடல்' என்ற வசந்தம் தொலைக்காட்சி நிகழ்வின் மூலம் தன் நடிப்புப் பரிமாணத்தைத் தொடங்கிய இவர் வேட்டை 5, மரியாதை, மையம், நாம் 1 & 2 போன்ற வசந்தம் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார். நடிப்பு, திரைக்கதை, இயக்கம், பாடல் வரிகள் எழுதுவது போன்ற பன்முகத்திறமை கொண்ட இவருக்கு இந்தியாவின் தமிழ்த்திரையுலகில் சிறந்த நடிகராவதே இலட்சியம்.
"எங்களுடைய நீண்ட நாள் கனவிற்கும் கடும் உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரமாக இவ்விருதுகளைக் கருதுகிறேன். தொடர்ந்து இத்துறையில் மென்மேலும் சாதிக்கும் உற்சாக கருவியே இவ்விருதுகள்" என்று கூறினார் திரு சரவணன்.
இக்குறும்படத்தின் இயக்குநரும் வசனகர்த்தாவுமான திரு ஜர்ஜிஸ், "ஒரு நடிகருக்குள் படத்தின் கதாபாத்திரத்தை கொண்டு வருதல், எளிமையான உடல், வாய் மொழிகளில் கதையைப் பார்வையாளர்களுக்கு விளக்குதல் என்பன போன்ற அடிப்படைக் கூறுகளை மெருகேற்றிக்கொள்ளும் வாய்ப்பாக இக்குறும்படம் அமைந்தது. அதிலும் நண்பர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்கமுடியாத அனுபவம்," என்று கூறினார்.
இதுவரையில் ஐந்து குறும்படங்களை இயக்கியுள்ள திரு ஜர்ஜிஸ் குறைந்த செலவில் உருவான தனிக்குறும்படம் (Independent short film) ஆதலால் இக்குறும்படத்தின் படப்பிடிப்பை இரண்டே இரவுகளில் முடித்ததாகவும் பகிர்ந்துகொண்டார்.
மேலும் அதிக வசதிகள் இல்லாத சூழலில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சத்துடன் படமாக்குவது ஒட்டுமொத்த குழுவிற்கே மிகப்பெரிய சவாலாக அமைந்ததாகவும் இவர் தெரிவித்தார். மேலும் இக்குறும்படம் இவ்வாண்டின் மோக்கோ அனைத்துலகத் திரைப்பட விழா, கோலிவுட் அனைத்துலகத் திரைப்பட விழா உள்பட பல திரைப்பட விழாக்களில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. இக்குறும்படத்தை வருகின்ற ஜூலை மாதம் யூடியூப் தளத்தில் வெளியிடவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

