'பிச்சைக்காரன்' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆவல்தான் தம்மை இயக்குநராக மாற்றியது என்கிறார் அப்படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி.
தாம் திட்டமிட்டு திரைப்பட இயக்குநராகவில்லை என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இசையமைப்பாளராக திரையுலகுக்கு அறிமுகமான எனக்கு, இயக்குநர் ஆக வேண்டும் என்ற குறிக்கோள் இருந்ததில்லை. 'பிச்சைக்காரன்' போல் ஒரு படம் மீண்டும் வெளிவந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. மனதில் இந்த எண்ணம் தோன்றியதும் அதே வேகத்தில் ஒரு கதையை எழுதி முடித்தேன்.
"பின்னர் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் சசியை அணுகியபோது, அவர் 'நூறு கோடி வானவில்' பட வேலைகளில் மூழ்கி இருந்தார். அவரது அந்தப் படத்தை முடித்த பிறகுதான் என்னுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்று தன் சூழலை அவர் வெளிப்படையாகச் சொன்னார்.
"இன்னொரு தயாரிப்பாளரிடம் முன்பணம் பெற்றுள்ளதாகவும் தமது அடுத்த படத்தை அந்தத் தயாரிப்பாளருக்கு இயக்கித் தரவேண்டிய பொறுப்பும் கட்டாயமும் இருப்பதாக சசி சொன்னபோது, அதில் உள்ள நியாயம் எனக்குப் புரிந்தது," என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
'பிச்சைக்காரன்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவது தொடர்பாக மேலும் சில இயக்குநர்களைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், குறிப்பிட்ட சில காரணங்களால் அவர்களுடன் இணைய முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
எனவேதான், வேறு வழியின்றி தாமே இயக்குநராவது நல்லது என முடிவெடுத்தாராம். முதல் பாகத்துக்கும் இப்போது வெளியாகி உள்ள இரண்டாம் பாகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தொடக்கத்திலேயே தெளிவுபடுத்துகிறார்.
"மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒருவனின் கதை இது. முதல் பாகம் அம்மா, மகன் பாசத்தைப் பேசியது. அடுத்த பாகம் அண்ணன், தங்கை பாசத்தைப் பற்றி அலசி உள்ளது.
"இந்தியாவின் ஏழாவது பணக்காரரான விஜய் குருமூர்த்தியின் வாழ்க்கையில் நடக்கும் சில சுவாரசியமான நிகழ்வுகள்தான் படம். விஜய் குருமூர்த்திக்கு சத்யா என்று இன்னொரு பெயர் இருக்கும். அந்தப் பெயர் ஏன் வந்தது என்பது படம் பார்க்கும்போதுதான் புரியும்.
"எனக்கு எது வசதியோ, எது எனது குணாதிசயத்துக்கு ஒத்துவருமோ, அவற்றை மட்டும்தான் முயற்சி செய்வேன். எனது பலம், பலவீனம் குறித்து மற்றவர்களைவிட நான் அதிகம் தெரிந்து வைத்துள்ளேன்," என்கிறார் விஜய் ஆண்டனி.
தனது புதுப்படத்தில் கதைக்கு தேவையான அம்சங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடுபவர், படத்துக்கான இசையும் பாடல்களும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளன என்கிறார்.
"பாடல்கள் கதைக்கு தேவையானதாக, சூழ்நிலைக்குப் பொருத்தமானதாக இருக்கும்.
"அனைத்துப் பாடல்களையும் கவிஞர் அருண்பாரதி எழுதியுள்ளார். பின்னணி இசையும் கதையை மீறாதளவுக்கு இருக்கும். ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
"தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் இப்படத்தை தயாரித்துள்ளது.
சென்னை, துபாய், மலேசியா என முந்நூறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம். இசையமைப்பாளர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், படத்தொகுப்பாளர் என இதுநாள் வரை கோடம்பாக்கத்தில் வலம்வந்த நிலையில் இயக்குநராகவும் செயல்படுவது நெருக்கடியை ஏற்படுத்தாதா என்று சிலர் கேட்கிறார்கள்.
"நான் முன்பே குறிப்பிட்டதுபோல் எனக்கு எது வருமோ அதை மட்டுமே செய்கிறேன். இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன்," என்கிறார் விஜய் ஆண்டனி.

