'வடசென்னை' படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் வெற்றிமாறன் தம்மை கெட்ட வார்த்தைகள் பேசி நடிக்கச் சொன்னதாக ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
அப்படத்துக்கான நடிப்புத் தேர்வில் பங்கேற்றபோது, ஐஸ்வர்யா கெட்ட வார்த்தைகளை உச்சரித்த விதம் இயக்குநருக்குப் பிடித்துப் போனதாம்.
அதனால்தான் தமக்கு அவரது இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக அண்மைய பேட்டிஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தேர்வின்போது எனக்குத் தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தைகளையும் பேசுமாறு வெற்றிமாறன் சார் சொன்னார். எனக்கு அதைக் கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது.
"என்ன சார்... நான் எப்படி கெட்ட வார்த்தைகளைப் பேசி நடிக்க முடியும் என்று அவரிடம் கேட்டபோது, சிரித்துக் கொண்டே, 'முதலில் நீ பேசும்மா' என்றார். வேறு வழியின்றி துணிச்சலை வரவழைத்துக்கொண்டு பேசினேன்.
"சிறிது நேரத்துக்குப் பிறகு 'என்னம்மா... எப்போது படப்பிடிப்புக்குப் போகலாம்?' என்று இயக்குநர் மீண்டும் கேட்டபோது, எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
"படப்பிடிப்புக்குச் செல்வது குறித்து என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று நான் விவரம் கேட்டபோது, 'பின்னே... படத்தின் கதாநாயகியிடம் கேட்க வேண்டுமல்லவா?' என்று பதிலளித்தார்.
"நீதான் இந்தப் படத்தின் கதாநாயகி என்று அவர் தெரிவித்தபோது, நான் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனேன்.
"நான் பேசிய சில கெட்ட வார்த்தைகளால்தான் மிகச் சிறந்த ஒரு படைப்பில் பங்களிக்கும் வாய்ப்பு கிடைத்தது," என்று ஐஸ்வர்யா ராஜேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெற்றி மாறன் எந்தக் கட்டத்திலும் பதற்றம் அடைய மாட்டார் என்றும் யாரையும் தேவையின்றிக் கடிந்துகொள்ள மாட்டார் என்றும் சொல்லும் ஐஸ்வர்யா, ஒரு படத்துக்காக உழைக்கும் கடைக்கோடி தொழிலாளிகள் வரை அனைவருக்கும் உரிய மரியாதை கொடுப்பார் என்கிறார்.
"'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பின்போது நிறைய சந்தேகங்கள் எழும். அவை குறித்து அவரிடம் ஓரிரு நிமிடங்கள் பேசினாலே போதும், தெளிவாகி விடுவோம்.
அந்த அளவுக்கு சுறுசுறுப்பாகச் செயல்பட்டு சிந்திப்பார். அவரது இயக்கத்தில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று எல்லாரும் விரும்புவதற்கு இதுதான் காரணம்," என்கிறார் ஐஸ்வர்யா.
தொடர்ந்து நாயகிகளை முன்னிலைப்டுத்தும் படங்களில் நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

