விக்ரம் விளக்கம்

2 mins read
7725efdb-e7c4-4120-ae29-589931301bc4
-

பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் 'கேன்ஸ்' அனைத்துலக திரைப்பட விழாவில் கலந்துகொண்டார். அங்கு அவர் இயக்கிய 'கென்னடி' படம் திரையிடப்பட்டது. அதன்பிறகு நடந்த நேர்காணலில் 'விக்ரம் இந்தப் படத்தில் நடிக்க மறுத்தார்,' என்று அனுராக் பேசிய காணொளி வலைத்தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து விக்ரமை பலரும் விமர்சிக்க தொடங்கினர். அதற்கு விக்ரம் பதிலளித்து இருக்கிறார். அதற்கு மீண்டும் அனுராக் பதிலளித்து இருப்பது தற்பொழுது கோலிவுட்டில் வைரலாகி வருகிறது.

பிரபல யூடியூப் தளத்திற்குப் பேட்டியளித்த அனுராக், "'கென்னடி' படம் விக்ரமை மனதில் வைத்து எழுதினேன். ஏனென்றால் விக்ரமின் உண்மையான பெயர் 'கென்னடி'. இந்தப் படத்திற்காக அவரைப் பலமுறை தொடர்புகொண்டேன். அவர் கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகே ராகுலை வைத்து இந்தப் படத்தை எடுத்தேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் பேசிய காணொளி யூடியூப் தளத்தில் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டதுடன் பலரும் விக்ரமை விமர்சிக்கத் தொடங்கினர்.

அதற்கு டுவிட்டரில் பதிலளித்த விக்ரம், "நீங்கள் என்னைத் தொடர்புகொள்ள முயன்றீர்கள் என்று என் நண்பர் கூறினார்.

"நானே உடனடியாக உங்களை அழைத்து, உங்களிடமிருந்து எந்த மின்னஞ்சலும், குறுஞ்செய்தியும் வரவில்லை என்று விளக்கினேன். மேலும் 2 ஆண்டுகளுக்கு முன்பே எனது தொலைபேசி எண் மாறிவிட்டது என்றும் தெரிவித்தேன்.

"உங்களிடம் 'கென்னடி' படத்தைப் பார்ப்பதற்கு ஆவலாக காத்திருக்கிறேன். அதுவும் அந்தப் படம் என் பெயரில் இருப்பதால் கட்டாயம் பார்ப்பேன். படம் வெற்றியடைய வாழ்த்துகள். நிறைந்த அன்புடன் சீயான் விக்ரம் என்கிற கென்னடி என்று குறிப்பிட்டு இருந்தேன்," என்று பதிவிட்டு இருந்தார்.

அதற்கு பதிலளித்த அனுராக், "நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான். ஆனால் உங்களை வைத்து படம் எடுக்க இருக்கிறேன் என்று நண்பர் மூலம் தெரிந்தும் நீங்கள் உடனே எங்களைத் தொடர்புகொள்ளவில்லை. காலதாமதம் ஆனதால் நாங்கள் படத்தை எடுக்கத் தொடங்கிவிட்டோம்.

"நேர்காணலில் நான் உங்களை வேண்டுமென்றே குறை சொல்ல நினைக்கவில்லை. இந்தப் படம் எப்படி உருவானது? ஏன் இந்தப் பெயர் என்று கேட்டதால் இதையெல்லாம் சொல்லும்படி ஆனது.

"கோபதாபம் வேண்டாம். விரைவில் நானும் நீங்களும் சேர்ந்து படம் பண்ணாமலா போகப்போகிறோம்? அந்த நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்," என்று பதிலளித்து இந்த விவாதத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து இருக்கிறார் அனுராக்.

அனுராக் தமிழில் அஜய் ஞானமுத்துவின் 'இமைக்கா நொடிகள்' என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவராக அறியப்பட்டவர்.

இயக்குநர் அனுராக் காஷ்யப்: விக்ரம் கண்டுகொள்ளவில்லை