ஒரு குண்டர் கும்பல் தலைவனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் படம் 'தலைநகரம் 2'. இதில் சுந்தர்.சி நாயகனாக நடிக்க, வி.இசட்.துரை இயக்குகிறார்.
பாலக் லால்வானி, ஐரா என படத்தில் இரு நாயகிகள் நடித்துள்ளனர். தம்பி ராமையா தத்துவம் பேசும் பேராசிரியராக திரையில் தோன்றுகிறார்.
"ஏற்கெனவே வெளியீடு கண்ட 'தலைநகரம்' படத்துக்கும் என்னுடைய புதிய படைப்புக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. தலைப்பை மட்டுமே பயன்படுத்தி உள்ளேன். மேலும், 'ரைட்' என்கிற சுந்தர்.சி.யின் கதாபாத்திரத்தையும் என் கையில் எடுத்துள்ளேன்.
"எனக்கு ஒரு தீவிரமான குண்டர் கும்பலின் தலைவர் திரையில் தேவைப்பட்டார். ஏற்கெனவே 'ரைட்' என்ற கதாபாத்திரம் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமாகி, பிரபலமாகவும் இருப்பதால் அந்தப் பெயரைத் தேர்வு செய்தேன்.
"பொதுவாக குண்டர் கும்பல்களின் தலைவர்களைச் சிறு அடியாள் கூட்டத்துடன் கூட பார்க்க இயலாது. அவர்கள் பெரும்பாலும் தனியாகத்தான் காணப்படுவர்.
"ஆனால் திரைப்படங்களில் இதற்கு முற்றிலும் நேர்மாறாக அவர்களைச் சித்திரிக்கிறோம். குண்டர் கும்பல் தலைவன் என்றால் பெரிய காரில் வந்திறங்குவான், சுற்றிலும் இருபது அடியாள்கள் இருப்பார்கள், பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிவார்கள் என்று காட்சிப்படுத்துவது வழக்கமாக உள்ளது. ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல.
"எனினும் அந்தக் குண்டர்கள் அவ்வப்போது ஓர் அரசாங்கம் போல செயல்படுவார்கள். அடிதடி, வெட்டு குத்து ஆகியவைதான் அவர்களுடைய வாழ்க்கை. ஆனால் இவற்றை எல்லாம் ஏன் செய்கிறார்கள் என்பதுதான் முக்கியக் கேள்வி.
"முன்பகைக்காகவோ, நட்புக்காகவோ இருக்கக்கூடும். சில சமயங்களில் சொத்துக்காகவும் அடாவடி செய்வார்கள். இப்படிப் பல காரணங்கள் இருக்கும். எனவே, வெறும் பணத்துக்காகத்தான் அவர்கள் எல்லாம் செய்கிறார்கள் என்று முடிவு கட்டுவது சரியாக இருக்காது.
"சில சமயங்களில் அவர்களுக்கு இது நல்லவிதமான செயல்பாடாக தோன்றக்கூடும். சினிமா கதாநாயகனைப் போல் தங்களையும் கற்பனை செய்து கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி மனதில் தங்கிவிடுகிறது போலும். ஒருசில குண்டர் கும்பல் தலைவர்கள் வெட்டுவது, குத்துவதில் கூட தங்களுக்கு என தனி பாணியை, ஸ்டைலைப் பின்பற்றுகிறார்கள். இன்னொருவரின் பயம், தயக்கம் ஆகியவைதான் இந்தக் குண்டர்களின் பலம். இவை அனைத்தையும் எனது புதுப்படத்தில் காட்சிப்படுத்த விரும்புகிறேன்," என்கிறார் இயக்குநர் துரை.
இப்படத்தின் கதாநாயகன் சுந்தர்.சி. இதுவரை முழுநீள அடிதடிப் படத்தில் நடித்ததில்லை என்று சுட்டிக்காட்டுபவர், சுந்தர்.சி.யும் இயக்குநர் என்பதால் அவரை வைத்துப் படம் இயக்குவது எளிதான பணியாக இருக்கும் என்கிறார்.
"நல்ல படைப்பாளிகளால் சுந்தர்.சியை நன்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். நம் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி நடிப்பார். அவரது உயரத்துக்கும் கம்பீரத்துக்கும் முழுநீள அடிதடி நாயகனாக நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இதுவரை அவர் இதைச் செய்யாததால் நான் ஒரு படத்தை அவ்வாறு உருவாக்குகிறேன்.
"அவரது சினிமா அனுபவம் எத்தகைய கதாபாத்திரத்தில் நடித்தாலும் கைகொடுக்கும். அதை என் படத்துக்காக அவர் பணியாற்றியபோது கண்கூடாகப் பார்த்தேன்.
"கதாநாயகி பாலக் லால்வானியைப் பொறுத்தவரை மிகப்பொருத்தமான தேர்வு எனக் கருதுகிறேன். அவரது கதாபாத்திரத்தை வேறு நாயகி ஏற்றிருந்தால் எனக்கு மனநிறைவு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். மற்றொரு நாயகியான ஐராவும் கச்சிதமாக நடித்துள்ளார். சுந்தர்.சி.க்கு ஈடுகொடுக்கும் வகையில் நான்கு வில்லன்களைக் களமிறக்கி உள்ளேன். அதனால் எனது புதுப் படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாகவும் அதிரடியாகவும் இருக்கும்," என உத்தரவாதம் அளிக்கிறார் இயக்குநர் துரை.

