விக்ரம் மகன் துருவ் 'ஆதித்யா வர்மா', 'மஹான்' இரண்டு படங்களிலும் நடித்திருந்தார். 'மஹான்' படத்தில் விக்ரம் நடிப்புக்கு வரவேற்பு இருந்தாலும் துருவ் விக்ரமிற்கு பெரிதாக நல்ல வரவேற்பு இல்லை. இந்நிலையில் அவர் தற்பொழுது 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' படங்கள் மூலம் கவனம் ஈர்த்திருந்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி விளையாட்டைப் பின்னணியாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை லைகா தயாரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்படத்தில் நடிக்க துருவ் விக்ரம் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் செய்தி தற்பொழுது கோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
மலையாள இயக்குநர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ரெஜினா'. இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். 'ரெஜினா' படம் பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் சுவரொட்டியைப் படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டக்காட்சி இன்று வெளியிட இருப்பதாகப் படக்குழு சுவரொட்டி வெளியிட்டு அறிவித்துள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகராகத் திகழ்பவர் சர்வானந்த். தமிழில் 'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு கடந்த ஆண்டு வெளியான 'கணம்' படமும் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. கடந்த மே மாதம் சர்வானந்துக்கும் அவரது காதலி ரக்ஷிதா ரெட்டிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஜூன் 3ஆம் தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. இந்நிலையில் நேற்று காலை நடிகர் சர்வானந்த் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் காருக்குள் இருந்த சர்வானந்துக்கு காயம் ஏற்பட்டது. 5 நாள்களில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் நடிகர் சர்வானந்த் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'சந்திரமுகி 2' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துவிட்டதாக ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் தனக்கு தங்க மோதிரத்தையும் கடிகாரத்தையும் பரிசாக கொடுத்த முதல் நாயகன் லாரன்ஸ் என்றும் பதிவிட்டு இருக்கிறார். அவற்றை அணிந்து லாரன்சுடன் நின்று படம் எடுத்து அந்தப் படத்தையும் டுவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார். முன்னதாக, வடிவேலு 'ரிஸ்க் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி' என்று படப்பிடிப்புத் தளத்தில் பேசிய காணொளியை ராதிகா பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

