தளபதியை பின்னுக்குத் தள்ளிய உலக நாயகன்

தளபதியை பின்னுக்குத் தள்ளிய உலக நாயகன்

2 mins read
94a38ce4-dd0b-42de-9178-cf1a07c6c5a0
-

நடிகர் விஜய் 'தளபதி 68' படத்தில் நடிக்க ரூ.200 கோடி சம்பளம் வாங்கப் போகிறார் என்பதுதான் அண்மைய இந்திய திரையுலகையே ஆட்டிப் படைத்த செய்தியாக இருந்தது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தெலுங்குப் படத்தில் வெறும் 20 நாள்கள் மட்டும் நடிக்க ரூ.150 கோடி சம்பளம் வாங்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகி திரையுலகத்தை அதிர வைத்து இருக்கின்றன.

நடிகர் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் 'ப்ராஜெக்ட் கே'. 'நடிகையர் திலகம்' படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்திய அளவில் அதிக பொருள்செலவில் இந்தப் படம் உருவாகி வருகிறது. தெலுங்கின் முன்னணி நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. வைஜெயந்தி மூவிஸ் தற்போது 50வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையடுத்து, பொன்விழா ஆண்டு படைப்பாக பிரம்மாண்டமாக இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். நடிகர் அமிதாப் பச்சனும் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜனவரி 12ஆம் தேதி அனைத்துலக அளவில் திரையரங்குகளில் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் சம்பந்தப்பட்ட இந்தப் படம் மிரட்டலான திரைக்கதையில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் வில்லனாக உலகம் அறிந்த ஒருவரை நடிக்க வைக்க முடிவெடுத்த இயக்குநர் உலகம் அறிந்த ஒருவர் உலக நாயகன் தான் என்பதால் கமல்ஹாசனையே நடிக்க வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

அதனைத்தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்

திடம் பேசி பெருந்தொகைக்கு கமல் ஹாசனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

'விக்ரம்' படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றியைக் கொடுத்த கமல்ஹாசன் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வெறும் குரல் கொடுத்து அசத்தினார். இந்நிலையில், 'ப்ராஜெக்ட் கே' படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார் என்கிற செய்தியால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இதுவரை நாயகனாக நடித்து கமல்ஹாசன் ரூ.150 கோடி ரூபாய் சம்பளம் வாங்காத நிலையில், வெறும் 20 நாள்கள் படப்பிடிப்புக்கு அவருக்கு ரூ.150 கோடி ரூபாய் பேசப்பட்டு இருப்பது ஒட்டுமொத்த திரையுலகையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

நடிகர் விஜய்க்கு 'தளபதி 68' படத்தில் ரூ.200 கோடி சம்பளம் என சில தினங்களுக்கு முன்பாக வெளியான தகவல்களை தயாரிப்பு நிறுவனமோ விஜய் தரப்போ மறுக்கவில்லை. 'லியோ' படத்தின் வியாபாரம் காரணமாக அந்த அளவுக்குச் சம்பளம் கொடுப்பது உண்மைதான் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இந்நிலையில், சம்பள விவகாரத்தில் விஜய்யை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்திருக்கும் கமல்ஹாசனை அவரது ரசிகர்கள் பாராட்டி பதிவுகளை வலைத்தளங்களில் பதிந்து வருகின்றனர்.

அபுதாபியில் நடந்த அனைத்துலக இந்திய திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.