அனைத்துலக இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு அபுதாபியில் நடந்தது. இந்த விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து 'ராக்கெட்டரி' என்ற படத்தை இயக்கிய நடிகர் மாதவனுக்கு சிறந்த இயக்குநர் என்ற விருது கிடைத்து இருக்கிறது. உளவு பார்த்ததாகப் போலி குற்றச்சாட்டில் சிக்கி சிறைத் தண்டனையும் சித்ரவதையும் அனுபவித்த நேர்மையான விஞ்ஞானியின் வாழ்க்கைச் சம்பவங்களை இந்தப் படத்தில் மாதவன் பதிவு செய்து இருந்தார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் 'மாவீரன்'. அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'மண்டேலா' படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இந்தப் படத்தையும் இயக்கி உள்ளார். தமிழைப்போல் தெலுங்கிலும் 'மாவீரன்' என்ற பெயரிலேயே ஜூலை 11ஆம் தேதி வெளியாகிறது. இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. குரல் பதிவு பணிகள் நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளதைப் படக்குழுவினர்கள் காணொளி எடுத்து வெளியிட்டுள்ளனர்.
'சாகுந்தலம்' படம் 80 கோடி ரூபாய் பொருள் செலவில் உருவானது. ஆனால் 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்துள்ளது. இதனால், படத்தின் தயாரிப்பாளர் மட்டுமல்ல திரையரங்கு உரிமையாளர்களும் 'சாகுந்தலம்' திரைப்படத்தின் மோசமான தோல்வியால் துவண்டு போய் இருக்கின்றனர். இவர்கள் மட்டுமில்லாமல் சமந்தாவும் தற்போது கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இந்நிலையில், படுமோசமான படம் என்று பெயர் எடுத்த, 'சாகுந்தலம்' படத்திற்கு உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது கிடைத்துள்ளது. இப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய நீதா லுல்லாவிற்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது. இப்படத்திற்கு வந்த மோசமான விமர்சனத்தால் கவலை அடைந்த ரசிகர்களுக்கு இந்த விருது சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.
சூர்யா நடித்து வரும் 'கங்குவா' என்ற படம் 30 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ஞானவேல் ராஜாவிற்கும் சூர்யாவுக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்தது. அதைச் சரி செய்யும் நோக்கத்தில், "பெரிய பட்ஜெட்டில் படம் செய்ய இருக்கிறேன். அதில் நீங்கள் நடிக்கவேண்டும்," என்று சூர்யாவிடம் ஞானவேல் ராஜா கேட்டதையடுத்து சூர்யா மனக்கசப்பை மறந்து படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்காக சூர்யா உடற்பயிற்சி செய்து வருகிறார். படம் வரலாற்று சம்பந்தமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

