ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளில் நடிப்பதை அறவே விரும்புவதில்லை என்கிறார் நடிகர் 'ஹிப் ஹாப்' தமிழா ஆதி. இவரது நடிப்பில் வெளியாகி உள்ள புதுப் படம் 'வீரன்'.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. 'மரகத நாணயம்' படப் புகழ் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கிஉள்ளார்.
"சத்யஜோதி நிறுவனத்துடன் நான் இணைந்துள்ள மூன்றாவது படம் இது. மற்ற இரண்டு படங்களைப் போலவே இதுவும் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையில்தான் நடித்துள்ளேன்.
"அடுத்து இயக்குநர் சரவன் பற்றி குறிப்பிட வேண்டும். 'இன்று நேற்று நாளை' படத்துக்கு இசையமைத்த போதுதான் அவர் எனக்கு அறிமுகமானார். மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடிய இயக்குநர்.
"நாம் பார்க்கும் வேலைகளைக் கடந்து சிலர் மட்டுமே நம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நண்பர்களாக இருப்பார்கள். அவர்களில் ஒருவர் சரவன். இந்தப் புதிய படத்துக்காக நாங்கள் ஆறு மாதங்கள் இணைந்து பயணித்தோம். முழுப் பயணத்திலும் அவர் என்னுடன் இருந்ததால் நெருக்கமான நண்பர்களாகிவிட்டோம்," என்கிறார் ஆதி.
இதுவரை தாம் நடித்த படங்களிலேயே 'வீரன்' படத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான சண்டைக் காட்சிகள் நிறைந்திருப்பதாகக் குறிப்பிடுபவர், நடிகர் வினய் இப்படத்தில் வில்லனாக நடித்திருப்பது பெரும் பலம் என்கிறார்.
"வினய் அண்ணன் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதால் பிரம்மாண்ட படைப்பாக மாறிவிட்டது. அவருக்கு என் மீது பாசம் அதிகம்.
"புது திறமைசாலிகளை ஒவ்வொரு படத்திலும் அறிமுகப்படுத்துவதைப் பாக்கியமாகாக கருதுகிறேன். அந்த வகையில் இந்த 'வீரன்' படத்திலும் சிலரைப் பார்க்க முடியும்.
"இந்தப் படத்தில் நான் நடித்ததைவிட கற்றுக்கொண்ட விஷயங்கள் அதிகம் உள்ளன. மண் சார்ந்த ஒரு 'சூப்பர் ஹீரோ' கதாபாத்திரம் என்பதால் நடை, உடை, பாவனை என அனைத்திலும் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளோம். அனைத்து தொழில்நுட்பக்கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றினர். என்னதான் சூப்பர் மேன், அயர்ன் மேன் என வந்தாலும் நம் மண் சார்ந்த 'சூப்பர் மேன்'கள் என்றால் தனிச் சிறப்புதான். அவர்களை எப்போதும் போற்ற வேண்டும்.
இப்போது, தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது தள்ளிப் போயிருப்பதால் குழந்தைகளோடு குடும்பமாகத் திரையரங்கம் சென்று இப்படத்தைக் காணலாம் என்றும் அடுத்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் குழந்தைகளின் நினைவில் நிற்கக்கூடிய படைப்பாக 'வீரன்' உருவாகி உள்ளது என்றும் சொல்கிறார் ஆதி.
"படத்தில் முகம் சுளிக்க வைக்கும் காட்சி ஒன்றுகூட கிடையாது. இசையிலும் பல புதிய விஷயங்களைப் பரிசோதித்துள்ளோம். மூன்று மாதங்களில் மொத்த படத்தையும் முடித்துவிட்டார் இயக்குநர். எனினும் அதற்கு முன்பாக ஏறக்குறைய ஆறு மாத காலம் எனது கதாபாத்திரத்துக்காக குதிரையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டேன்.
"மேலும், 'சிங்கிள் பசங்க', 'கேரளா டான்ஸ்' என என்னுடன் தொடக்கத்தில் இருந்தே இணைந்து பயணித்து வரும் சந்தோஷ் மாஸ்டர்தான் இதற்கும் நடனம் அமைத்தார். கதைக்கு மண்சார்ந்த நடன அசைவுகள் பெரிதும் கைகொகடுத்தன," என்கிறார் ஆதி.