ஐஸ்வர்யா லட்சுமி (படம்) தற்போது துல்கர் சல்மானுடன் 'கிங் ஆஃப் கோத்தா' என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அண்மைய பேட்டி ஒன்றில் தாம் நடிகையாவதற்கு தன் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"நான் மருத்துவராக வேண்டும் என்பதுதான் பெற்றோரின் விருப்பம். படிப்பை முடித்துவிட்டு, முழுநேர மருத்துவராகப் பொறுப்பேற்கும் வகையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன்.
"திரையுலகம் குறித்து எனது பெற்றோருக்கு எதிர்மறையான கருத்துகள் மட்டுமே இருந்தன. இதற்காக அவர்களை குறைகூற இயலாது. ஏனெனில் இங்கு சினிமாவில் நடிப்பதை பலர் மரியாதைக்குரிய தொழிலாக கருதவில்லை," என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
சினிமா வாழ்க்கை தமக்கே இன்னும் பிடிக்கவில்லை என்றும் இந்தத் துறையில் நீடித்திருப்பது அவ்வளவு எளிதல்ல என்றும் சொல்கிறார்.
"திரையுலகில் ஒவ்வொரு நாளும் நீங்கள் போராட வேண்டி இருக்கும். இல்லையென்றால் நீங்கள் தோற்றுவிட்டதாக முடிவு கட்டிவிடுவார்கள். பெண்களை மட்டுமே முன்னிலைப்படுத்தும் கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில் ஆண்களும் பெண்களும் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே எந்தவொரு படமாக இருந்தாலும் அது சமநிலையில் இருப்பதாக ரசிகர்கள் கருத வேண்டும்.
"அதுமட்டுமின்றி சினிமா என்பது சமூகத்தையும் நம் வாழ்க்கையையும் பிரதிபலிக்கிறது. எனவே அதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது," என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.