மலையாளப் படங்களில் நடிப்பதை தவிர்க்கப் போவதாக தெரிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
மலையாளத்தில் வசனங்களைப் புரிந்துகொண்டு நடிப்பது சிரமமாக உள்ளது என்றும் தமது முடிவுக்கு இதுதான் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நான் எப்போதும் எனக்கான கதாபாத்திரங்களுக்காக அதிகம் மெனக்கெடுவேன். மலையாளப் படங்களுக்கும் இது பொருந்தும்.
"எனினும் மலையாளத்தில் பேசுவதற்கும் அம்மொழி வச னங்களைப் புரிந்துகொள்வதற்கும் சிரமமாக உள்ளது. அதனால் மலையாளப் படங்களில் நடித்து முடிக்க காலதாமதம் ஆகிறது. எனவேதான் அம்மொழியை நன்கு கற்றுத்தேறும் வரை மலையாளப் படங்களில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளேன்.
"மலையாளத்தில் தரமான படைப்புகள் தொடர்ந்து உருவாகிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது. மலையாள மொழியில் நடிப்பதை பெரிதும் விரும்புகிறேன்," என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' என்ற மலையாளப் படத்தில் துல்ஹர் சல்மானுடன் இணைந்து நடித்த இவர், பின்னர் அம்மொழியில் மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் பல வாய்ப்புகள் தேடி வரும் நிலையில், ஐஸ்வர்யா எடுத்துள்ள திடீர் முடிவு ஏமாற்றம் அளிப்பதாகவும் எனினும் அம்முடிவை மதிப்பதாகவும் மலையாளத் திரையுலகத்தினர் கூறி உள்ளனர்.

