ஏறக்குறைய 32 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்க உள்ளார் ரஜினிகாந்த்.
தற்போது, 'ஜெயிலர்' படத்தில் நடித்து வரும் அவர், தன் மகள் ஐஸ்வர்யா இயக்கும் 'லால் சலாம்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவும் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதை நாயகர்களாக நடிக்கின்றனர்.
இந்நிலையில், சூர்யாவை வைத்து 'ஜெய் பீம்' படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல், ரஜினியின் 170ஆவது படத்தை இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதில் போலி என்கவுண்ட்டரில் கொல்லப்படும் அப்பாவி ஏழைகளுக்காக போராடும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக நடிக்கிறாராம் ரஜினி.
மேலும், அமிதாப் பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்க உள்ளதாகத் தகவல். இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ரஜினியும் அமிதாப் பச்சனும் ஆகக் கடைசியாக 1991இல் வெளியான 'ஹம்' என்ற இந்திப் படத்தில் சேர்ந்து நடித்தனர்.
அண்மையில் மும்பை சென்று அமிதாப் பச்சனை நேரில் சந்தித்து தாம் உருவாக்கிய கதையை விவரித்துள்ளார் ஞானவேல்.
முழுக் கதையையும் கேட்ட பின்னர் நன்றாக இருப்பதாகப் பாராட்டி உள்ளார் அமிதாப். எனினும் படத்தில் நடிப்பதை அவர் இன்னும் உறுதி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
அமிதாப் கால்ஷீட் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாகவும் அதற்குத் தீர்வு கண்ட பின்னர் அவர் இப்படத்தில் நடிப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
இதற்கிடையே புதுப் படத்துக்கான தலைப்பை முடிவு செய்வதில் இயக்குநர் ஞானவேல் குழுவினர் தீவிர யோசனையில் மூழ்கி உள்ளனர்.
அநேகமாக ஜெயிலர் பட இசை வெளியீட்டுக்கு முன்பே ஞானவேல், ரஜினி கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.