திரைத் துளி­கள்

2 mins read

 திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பத்ரி எம் சினிமா என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரிக்கும் படம் 'லாந்தர்'. 'விடியும் வரை காத்திரு' படத்தை இயக்கிய சாஜிசலீம் இயக்குகிறார். விதார்த், சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணனிடம் உதவியாளராக பணிபுரிந்த பிரவீன் இசையமைக்கும் இப்படத்தில் திகிலும் மர்மங்களும் நிறைந்திருக்குமாம். இன்று இளையர்கள் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது வித்தியாசமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அதை மனதிற்கொண்டு இதுவரை யாரும் சொல்லாத திகில் கதையை உருவாக்கி உள்ளோம்.

"எனினும் 'லாந்தர்' படம் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றதாக இருக்கும். பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. எனது முதல் திரைப்படம் வெளி யாவதற்கு முன்பே என் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் பத்ரிக்கு நன்றி," என்கிறார் இயக்குநர் சாஜிசலீம்.

 பெண்களை மதிக்கத் தெரிந்த ஒருவரைத்தான் தமது வாழ்க்கைத் துணையாக எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார் அஞ்சலி.

அண்மைய பேட்டியில் அவர் தனது எதிர்கால கனவுகள், எதிர்பார்ப்புகள் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.

"எனக்கேற்ற ஒருவரைக் கண்டதும் திருமணம் செய்து கொள்வேன். அவர் திருமணம் முடிந்த பிறகும் என்னை மரியாதையாக நடத்தக்கூடியவராக இருக்க வேண்டும். அன்பு, காதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பிறகு யோசித்தால் போதும் என நினைக்கிறேன். எனவே நல்லதொரு துணையைக் கண்டுபிடித்ததும் விவரம் தெரிவிப்பேன்," என்கிறார் அஞ்சலி.

 'மேரி கிறிஸ்துமஸ்' என்ற தலைப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை கத்ரினா கைஃப் ஒப்பந்தமாகி உள்ளார்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கும் இப்படம் மும்பை செல்லும் தமிழ் இளையர் ஒருவர் அங்கு எதிர்கொள்ளும் அனுபவங்களை விவரிக்கிறது. மும்பைதான் கதைக்களம் என்றாலும் படம் முழுவதும் தமிழில் மட்டுமே பேசி நடிக்கிறாராம் சேதுபதி.

இந்நிலையில் இந்தி நடிகை ராதிகா ஆப்தேவும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஸ்ரீராம் ராகவன் இயக்கிய 'பதிலாபூர்', 'அந்தா தூண்' ஆகிய படங்களில் நடித்துள்ளார் ராதிகா. அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மூன்றாவது முறையாக ஸ்ரீராம் ராகவனுடன் இணைந்துள்ளார்.

ராதிகா நடித்தால் ராசியாக இருக்கும் என்பதால்தான் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இயக்குநர் தரப்பு மறுத்துள்ளது.

"தாம் ஏற்றுக்கொண்ட காதபாத்திரமாகவே மாறும் திறமை ராதிகாவிடம் உள்ளது. எனவேதான் அவரது திறமைக்கேற்ற கனமான கதாபாத்திரத்தை ஒப்படைத்துள்ளோம். அவர் தனது பணியைச் சிறப்பாகச் செய்வார் என்பதில் சந்தேகமே இல்லை," என்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன்.